Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் மின்னிலையத்தை இயக்கும் நிறுவனம் பலம்வாய்ந்தது: கஜேந்திரகுமாரின் தேசியம்

gadendrakumarசுன்னாகம் நீர் மற்றும் நிலத்தின் அழிவு தொடர்பாக தேசியக் கூச்சல் போடும் எந்த அமைப்புக்களும் மூச்சுக்கூட விட்டதில்லை. சுன்னாகம் சார்ந்த பிரதேச மக்களைத் தவிர வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் இப் பிரச்சனையை அறியாதவர்களாகவே உள்ளனர். தமிழீழம் பிடித்துத் தருவோம் என்று மக்களை ஏமாற்றும் புலம்பெயர் அமைப்புக்களாகட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்களாகட்டும் சுன்னாகம் அழிவைக் கண்டுகொள்வதில்லை.

தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் அழிக்கப்படும் போது கண்ணை மூடிப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த அயோக்கியர்களை மக்கள் மத்தியிலிருந்து அரசியல் நீக்கம் செய்வதன் ஊடாகவே புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமை தோன்றும்.

சுன்னாகத்தில் மட்டுமல்ல, சம்பூர், மன்னார் போன்ற பிரதேசங்களிலும் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசங்களாக மாற்றப்படுகின்றன.

இவற்றின் பின்புலத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களும், அதன் முகவர்களான இலங்கை இந்திய மற்றும் மேற்கு அரசுகள் செயற்படுகின்றன. இவற்றிற்கு எதிராக உலக மக்கள் மத்தியிலும் உலகில் போராடும் மக்கள் மத்தியிலும் பொதுப் புத்தி ஒன்றை தோற்றுவித்து அழிவுகளை மட்டுபடுத்துவதற்குப் பதிலாக அடையாளங்களையும் நினைவு தினங்களையும் பற்றி மட்டுமே பேசும் போலிகள் சுன்னாகம் பிரச்சனையில் மக்கள் அடையாளம் காண ஆரம்பித்துள்ளனர்.

கடந்தவாரம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர் கஜேந்திரகுமார் கனடாவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். 20 பேர் வரையிலான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்ட அந்த ஒன்று கூடலில் சுன்னாகம் அழிவு தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுன்னாகம் அனல் மின்னிலையத்தை இயக்கும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் பெரும் பணபலம் வாய்ந்தது என்றும், பலர் அவர்களிடம் பணம் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார். அதன் காரணமாக எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு எதிராகப் போராடுவது கடினமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலையை நடத்திய உலகின் வல்லரசுகள், இலங்கைப் பேரிவாத அரசு, அவற்றின் பின்புலத்திலுள்ள பெருந்தொகையான பல்தேசிய நிறுவனங்களிடம் போராடி போர்க்குற்ற விசாரணை நடத்தப்போவதாகவும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் கூறும் கஜேந்திரகுமாரிற்கு சுன்னாகத்தில் ஏற்பட்ட அழிவை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது முயல்கொம்பாக உள்ளது என்பது எவ்வளவு வேடிக்கையானது?

Exit mobile version