மரணித்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழக அரசுகளால் தெருக்களில் வீசியெறியப்பட்ட வறிய மக்களே. மழை தொடர்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை மையங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய காலனியாதிக்கம் தான் ஆட்சிசெலுத்திய நாடுகள் முழுவதும் நகரங்களையும் கட்டுமானங்களையும் உருவாக்கிற்று. கொள்ளையிட்ட பணத்தோடு தமது நாடுகளில் வாழ்வதற்காக சீரமைக்கப்பட்ட உள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. தமது ஆதிக்கத்திலிருந்த நாடுகளில் தமது வர்த்தகப் பொருட்களை நகர்த்துவதற்காக மட்டுமே உள் கட்டுமானப் பணிகளைக் காலனியாதிக்க நாடுகள் மேற்கொண்டன.
நகரங்களைக் கட்டடக் குவியல்களாகத் தோற்றுவித்த காலனியாதிக்கம் தனது அடிமைகளை ஆட்சியில அமர்த்திவிட்டு சொந்த நாட்டிற்குத் திரும்பியது.
ஆட்சிபீடத்தில் அமர்ந்துகொண்ட அடிமைகள் தமது ஊழல் பேரரசை நிறுவிக்கொண்டனர். அடிப்படை மனிதத் தேவைகளைக் கூட மதிக்காத பழமைவாத அதிகாரவர்க்கம் மக்களை ஒட்டச் சுரண்டி நாடு முழுவதையும் சிதைத்துச் சீரழித்தது. பிரித்தானிய அரசின் சுரண்டலை எந்தச் சமூக அக்கறையும் இன்றித் தொடர்ந்தது.
அருவருக்கத்தக்க அதிகாரவர்க்கம் தோன்றுவதற்கு சாதீய ஒடுக்குமுறை துணை சென்றது. அதே அதிகாரவர்க்கம் இன்று மீட்புப் பணிகளைக்கூட முன்னெடுக்காமல் தமது மாளிகைகளில் முடங்கிக் கிடக்கின்றது.
காலனியாதிக்கம் திட்டமிட்ட நகரங்களை பல மடங்கு அதிகமாக அழிவுகளை நோக்கி நிர்மாணித்த அதிகாரவர்க்கம் எந்த அவமான உணர்வுமின்றி இன்றும் மக்க்களிடம் வாக்குக் கேட்பதற்குத் தயாரகவுள்ளது.
சென்னையின் இன்றைய அவலத்திற்கு இயற்கையின் அனர்த்தம் மட்டும் காரணமல்ல, முதலாளித்துவ இலாப வெறியின் மூன்றாமுலகச் செயற்கை அனர்த்தமே அது.