இந்திய ஊடகம் ஒன்றிற்கு மின்னஞ்சல் ஊடாக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்து வெளியிடப்படும் ஆவணப் படம் சிங்கள மக்களுக்கு சென்றடையும் வகையில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கலம் மக்ரே இன் ஆவணப்படம் முதலில் வெளியானதும் ராஜபக்ச அரசு சிங்கள மக்களுக்கு என ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இலங்கை முழுவதும் பரவவிட்டது. சாமானிய சிங்கள மக்களுக்கு இதுவரை ஆட்சி செய்த அரசுகள் அனைத்தும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை மறைத்து ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. தொடர்ச்சியான பிரச்சாரங்கள் ஊடாக இந்தியாவுடன் இணைந்து தமிழ் மக்கள் சிங்கள மக்களை அழிக்க முயல்வதாகவே சித்தரித்தன.
உண்மை நிலைமைகளைச் சிங்கள மக்களுக்குக் கூற முற்பட ஊடகவியலாளர்களை ராஜபக்ச அரசு அழித்து மௌனமாக்கிய அதே வேளை தமிழ் நாட்டு இனவாதிகளின் பேச்சுக்களையும், புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் புலிக்கொடிப் போராட்டங்களையும் ஊடகங்களில் பிரசுரிக்க அனுமதி வழங்கியது.
இதனால் தமிழர்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்கவில்லை, நாடுபிடிக்கவே முயல்கின்றனர் என்ற விம்பத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தது. சிங்கள மக்கள் மத்தியில் வாக்குப் பொறுக்கும் இடதுசாரிக் கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளோடு இணைந்துகொண்டன.
சிங்கள மக்கள் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கும் வரை நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றது என்பதை இடது கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து பேரினவாத அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை சென்றன.
சிங்கள மக்களுக்கு உண்மைகளைச் சொல்லி அவர்களைப் பேரினவாதிகளுக்கு எதிராகத் திசைதிருப்ப வேண்டிய தமிழ்த் தலைமைகள் பேரினவாதத்திற்குத் துணை போகும் வகையில் நடந்துகொண்டன.
இந்த நிலையில் மக்ரே தமிழ் அரசியல் தலைமைகள் ஆற்றவேண்டிய பணியைத் தானே தனித்து மேற்கொள்கிறார். அவரது முயற்சி வெற்றியடைய வேண்டும்.
இனவாதப் போராட்டங்களை நடத்தி ராஜபக்சவையும் பேரினவாதத்தையும் வாழவைத்த தமிழ்த் தலைமைகள் கலம் மக்ரேயிடமிருந்து பாடம் கற்றுகொள்ளலாம்.