வரலாற்றுரீதியாக சிங்கள மக்களுக்கு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. நாளாந்த சிங்கள ஊடகங்கள் மக்களிடமிருந்து உண்மைகளையும் தரவுகளையும் மூடி மறைப்பதன் ஊடாகவே தமது அதிகாரவர்க்க அரசியல் உறுதிப்படுத்திக்கொள்கின்றன. தமிழ் மக்கள் மத்தியிலும் பல உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அவர்களை வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் போல உலக மக்களுக்கு தமிழ் அதிகாரவர்க்கம் மறைத்து வந்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் மக்களின் அவலங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் குழுக்கள் இதனை நடத்தி முடிக்கின்றன.
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு ஆவணப்படம் காண்பிக்கப்பட வேண்டும். முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை அரசின் முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்த மக்ஸ்வெல் பரணகம என்ற முன்னை நாள் நீதிபதியின் தலைமையிலான ஆணைக்குழு இறுதி யுத்தத்தில் நடைபெற்ற படுகொலைகளையும், போர்க்குற்றங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதே வேளை உயர் இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கலம் மக்ரேயின் வேண்டுகோள் வெளிவந்துள்ளது. ஆவணப்படம் சிங்களத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுமானால் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உண்மை தெரிந்துகொள்ளும் போதே நல்லிணக்கம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். நல்லிணக்கம் தொடர்பாகக் கூச்சலிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பாரளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி.
கலம் மக்ரே இன் ஆவணப்படம் உண்மையானது என பரணகமவின் அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில் மக்ரேயின் கோரிக்கையை கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ஒலிப்பது அதன் கடமையாகும். தவறினால் பேரினவாதத்தின் உப கூறு போன்றே கூட்டமைப்புச் செயற்படுவதாகக் கருதப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்ல மாறாக அரசோடு ஒட்டிக்கொண்டு சிங்கள அதிகாரவர்க்கத்தோடு இணக்கம் ஏற்படுத்திக்கொள்வதே எனத் தெளிவாகிவிடும். அதே வேளை புலம்பெயர் நாடுகளில் குடிகொண்டுள்ள உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பின் நேர்காணல் ரூபவாஹினி தொலைக்காட்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பானது. ஆக, அதே கோரிக்கையை உலகத் தமிழர் பேரவையும் இலங்கை அரசை நோக்கி பகிரங்கமாக முன்வைக்க வேண்டும்.
கலம் மக்ரே இனியொருவிற்கு வழங்கிய நேர்காணல்: