பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கான நுளைவாசல் காலே(Calais) என்ற துறைமுகம். அண்மைக் காலங்களில் பிரித்தானியாவின் அழிவு என்பது காலே இலிருந்தே தோன்றப் போகிறது போன்ற பிரமை ஆங்கிலேயர்களின் மனங்களில் விதைக்கப்பட்டுள்ளது. பல்தேசிய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் காலே பிரதான இடத்தை வகிக்கிறது. காலேயிலிருந்து பிரித்தானியாவை நோக்கி நுளைய முற்படும் அகதிகள் தம்மை ஆக்கிரமித்து விடுவார்கள் என்பதே ஆங்கிலேயர்களின் துயரத்திற்கு மூல காரணம்.
இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தால் போல காலே இல் பிரித்தானிவிற்கு நுளைவதற்காகக் காத்திருக்கும் அகதிகள் பூச்சி புழுக்களைப் போன்றவை என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் கூறியமை ‘பிரித்தானிய வெள்ளை மேலாதிக்க உணர்விற்கு’ தீனி போட்டது.
ஏறத்தாள மூவாயிரம் அகதிகள் பிரித்தானியாவிற்குள் நுளைவதற்காக காலேயில் நிலைகொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் யூரோ கால்வாய் ஊடாக எல்லையக் கடக்க முயல்கின்றனர்.
எல்லைப் பாதுகாப்புப் போலிசின் கொடிய தாக்குதல்களுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 10 அகதிகள் மரணித்துள்ளனர்.
சிரியா, சூடான், ஈரான், ஆப்லானிஸ்தான், லிபியா, எரித்தியா, சோமாலியா போன்ற நாடுகளிலிருந்து பிரான்ஸ் நகரங்கள் ஊடாக காலே துறைமுகத்தை அடையும் அகதிகள் பிரித்தானியாவிற்குள் நுளைய முற்படுகின்றனர்.
இந்த நாடுகளிலெல்லாம் யுத்தமும் வறுமையும் மக்களைத் தின்றுகொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பல ஆயிரம் மைல்கள் பயணித்து காலேயை அடைந்துள்ளனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்ற தலையங்கத்தில் பிரித்தானியா உட்பட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாமுலக நாடுகளில் தலையிட்டன. அமைதியாக வாழ்ந்த மக்களைப் போர்களத்தில் பலியாக்கின. உள்ளூர் சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களில் உள்ளீடு செய்த ஏகாதிபத்திய நாடுகள் அவர்களைச் சொந்த இடங்களிலிருந்து பிடுங்கியெறிந்தது. பல்லாயிரக்கண்க்கானவர்கள் தமது சொந்த மண்ணிலேயே மாண்டு போயினர். கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள், பெண்கள், முதியோர் எனப் பேதமின்றி போரின் கோரம் கொன்று குவித்தது.
நாடுகளின் கனிமங்களையும், ஏனைய வளங்களையும் தமது பல்தேசிய நிறுவனங்களுக்குச் சுரண்டுவதற்காக போர் தொடர்கிறது.
அங்கிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அயல் நாடுகளையும், அன்னிய நாடுகளையும் நோக்கி ஓடுகின்ற அகதிகளின் ஒரு பகுதியினரே காலேயில் நிலை கொண்டுள்ளனர்.
பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டல் பிரித்தானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவ அரசுகள் இனிமேல் தமது வழ்வில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற முடிவிற்கு மக்கள் படிப்படியாக வந்து சேர்கின்றனர். பிரித்தானியா முழுவதும் நாளுக்கு நாள் அரசிற்கு எதிரான போராட்டங்கள் அதிகரிக்கின்றன.
இவ்வாறான ஒரு சூழலில் ஆபத்தை உணர்ந்துகொண்ட ஆங்கில அதிகாரவர்க்கம் காலே அகதிகளின் பிரச்சனையே இன்றைய பிரதான ஆபத்துப் போன்ற விம்பத்தை ஏற்படுத்தி மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றது. காலே அகதிகள் ஊடாக நிறவாதமும், தேசிய வாதமும் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.
பிரித்தானியா மட்டுமே அகதிகளின் புகலிடமாகிவிட்டது போன்ற போலி விம்பத்தை ஊடகங்களும் அரசும் ஏற்படுத்த முனைகின்றன.
சுற்றிவாரவுள்ள நாடுகளில் அகதிகளின் வருகையைப் பொறுத்தவரை பிரித்தானியாவிற்குள் செல்லும் அகதிகள் தொகை குறைவானது. ஜேர்மனியில் ஒரு லட்சத்து எழுபத்து மூவாயிரம் அகதிகளும், துருக்கியில் எண்பத்து ஏழாயிரம் அகதிகளும், சுவீடனில் எழுபத்து ஐந்தாயிரம் அகதிகளும், இத்தாலியில் அறுபத்து மூவாயிரம் அகதிகளும் விண்ணப்பித்துள்ள நிலையில் பிரித்தானியாவில் வெறும் முப்பத்து ஒராயிரம் அகதிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவின் அறிக்கையிலேயே மேற்குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊடகங்கள் இத்தகவலை வெளியிடுவதில்லை.
அகதிகளாக பிரித்தானியாவிற்குள் நுளைபவர்களுக்குப் பணமும் இலவச இருப்பிடமும் வழங்கப்படுவதாக பொதுவாக அனைத்து ஊடகங்களுமே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆக, அகதிகள் பிரச்சனை என்பது பிரித்தானியாவில் மக்களைத் திசை திருப்பும் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.