Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்தும் அரசிற்கு நன்றி : BTF

btfயாழ்ப்பாணம் சென்று பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹுகோ சுவயர், இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார். பிரித்தானிய அரசின் செய்தியாக அதனைக் கூறிய அமைச்சர் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தை உலக சமாதானப் பணிகளிலும் ஈடுபடுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

ஹூகோ ஸ்வயர் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட தைப் பொங்கல் செய்தியில் இலங்கையில் நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட்டு பாலும் தேனும் ஓடுவதாக பிரித்தானிய அரசு சார்பில் தெரிவித்தார்.

இதனை தமிழ் அமைப்புக்கள் கேள்விப்பட்டால் என்ன செய் செய்வார்கள்? இலங்கை இனப்படுகொலை இராணுவத்தை நவீனமயப்படுத்தி அதன் இனப்படுகொலையை மூடி மறைப்பதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

உடனடியாகக் கண்டன அறிக்கை ஒன்று வெளிவந்திருக்கும். சில வேளைகளில் போராட்டங்கள் கூட நடந்திருக்கும்.
நடந்ததோ வேறு!

இனப்படுகொலைக்கு நேரடியாக ஆதரவு வழங்கி, இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்தும் அரசிற்கு தமிழ் தலைமை ஒன்று பின்வருமாறு கூறுகிறது:

“இலங்கைத் தீவில் எமது உறவுகள் படும் துயரத்திற்கு தீர்வு காண்பதற்காக டேவிட் கமரனது தலைமையின் கீழ் பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஹூகோ ஸ்வயரின் இலங்கைப் பயணம் எமது உறவுகளின் வாழ்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.”

இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பின் பெயர் பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF).
சுன்னாகத்தில் நடத்தப்படும் பேரழிவு போருக்குப் பின்னான திட்டமிடப்பட்ட அழிப்பில் பிரதானமானது. இன்று வரைக்கும் இது தொடர்பான துண்டறிக்கைகூட வெளியிடத் துணிவற்ற இந்த அமைப்புக்கள் பிரித்தானியப் பிரதமருக்கு ஒளிவட்டம்கட்டி அழகு பார்க்கின்றன. அதிலும் இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்கு நன்றி தெரிவிக்கின்றன.
இன்றைய போலிகள் உண்மையான தேசிய வாதிகளாகவிருந்தால்.

1. முப்பதாயிரம் போராளிகளை தியாகிகளாக்கிய சமூகத்திற்கு அன்னிய உற்பத்திகளை நிராகரிக்குமாறு பிராச்சாரம் செய்திருப்பார்கள். மக்களில் பெரும்பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

2. உள்ளூர் உற்பத்திகளை உக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

3. உள்ளூர் வியாபாரமும், மூலதனமும் அன்னிய முதலீட்டாளர்களால் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.

4. அன்னிய மூலதனத்தின் உள்ளீட்டால் தான் கலாச்சாரம் சிதைவடைகிறது என்பதை மக்களுக்குக் கூறியிருப்பார்கள்.

5. இலவசக் கல்வி அழிக்கப்படும் போடு நடைபெற்ற போராட்டங்களைத் தலைமை தாங்கியிருப்பார்கள்.

6. வளங்கள் சுரண்டப்படும் போது அதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.

7. சுன்னாகம் போன்ற பேரழிவுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்திருப்பார்கள்.

அதை விடுத்து இனப்படுகொலை இராணுவத்தை புனிதப்படுத்துவதற்கு நன்றி தெரிவிக்க மாட்டார்கள். தமிழ்ப் பேசும் மக்களின் அழிவிற்கான ஆயுதம் இப் புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன்

Exit mobile version