2009 ஆம் ஆண்டில் வன்னி இனப்படுகொலை நடந்து முடிந்த நாளிலிருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மக்கள் சார்ந்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குறித்த அரசியல் திட்டம் எதுவுமற்ற இந்த அமைப்புக்கள் அடையாங்களையும் குறியீடுகளையும் தமது வியாபாரத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டன. இலங்கையில் அரசின் இனப்படுகொலையின் பின்புலத்தில் செய்ற்பட்ட பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாக மக்களை ஏமாற்றின.
கடந்த ஐந்து வருடங்களில் தமிழர்களின் பாரம்பரிய நிலம் சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. நிலப் பறிப்பு தங்குதடையின்றி நடைபெறுகின்றது. பறிக்கப்படும் நிலத்தைப் பல்தேசிய வியாபார நிறுவனங்களும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாளர்களும் பங்குபோட்டுக் கொள்கின்றனர். தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி அகதிகளாக உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளின் குறைந்தபட்ச ஜனநாயகச் சூழலைப் பயன்படுத்தி இதற்கெல்லாம் எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாத புலம்பெயர் அமைப்புக்கள் தமது சொந்த இருப்பிற்காக இன்று தமக்குள் மோதிக்கொள்கின்றன.
இனவழிப்பிலிருந்தே நமது நண்பர்களையும் எதிரிகளையும் பற்றி அரசியல் பாடம் கற்றுக்கொண்டுள்ள புலம்பெயர் சமூகத்தின் உணவுகளைச் சிதைத்து மோதல்களாக மாற்றும் இந்த அமைப்புக்களின் மோதல்கள் மக்களை விரக்திக்குள்ளாக்கும்.
புலம்பெயர் மக்கள் மத்தியில் மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகளைத் தோற்றுவிப்பதற்கான புதிய மாற்றங்கள் இல்லையெனில் போராட்டத்தின் எச்சசொச்சங்களும் அழிக்கப்பட்டுவிடும்.