Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குவது தவறே இல்லை – கோத்தாவின் நீதிமன்றம்!

தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்களைக் கையூட்டாக வழங்குவது தவறில்லை என ராஜபக்ச குடும்ப அரசின் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகிந்த ராஜபக்சவின் செயலாளராகச் செயற்பட்ட லலித் வீரதுங்க என்பவரும், இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுச் சபையின் முன்னை நாள் இயக்குனருமான அனுஷ பெல்பிட்ட என்பவரும், 600 மில்லியன் ரூபா பணத்தை மகிந்தவிடம் பெற்று வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கியிருந்தனர். இப் பணத்தைப் பயன்படுத்திய அவர்கள் துணிகளை வாங்கி 2015 ஆம் ஆண்டு மகிந்தவிற்கு வாக்களிக்குமாறு வழங்கியமைக்காக 3 வருடச் சிறைத்தண்டனையும் 10 மில்லியன் பணத்தொகையும் செலுத்துமாறு கடந்த அரச ஆட்சியின் போது பணிக்கப்பட்டனர். இருவரும் பிணையில் விடுதலையாகி தமது தண்டனைக்கு எதிரான மேன் முறையீட்டைச் செய்திருந்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகியோர், இச் செயற்பாட்டில் தவறில்லை எனவும், வாக்காளர்களைத் அணிதிரட்டும் ஒரு செயற்பாடே இது எனவும் குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்தனர்.

குறைந்த பட்ச முதலளித்துவ சனநாயகம் செயலிழந்து உலகம் முழுவதும் காட்டுமிராண்டிகளின் ஆட்சிக்கு அடிமையாக்கப்பட்டுள்ளது. மக்கள் கம்யூன்கள் ஊடாகத் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆழமான சனநாயக அமைப்பு முறையான சோசலிசம் தொடர்ச்சியான அன்னிய நாடுகளின் தாக்குதல்களாலும், தவறான பொருளதாரக் கொள்கைகளாலுன் வளர்ச்சியின்றி அழிந்து போய்விட்டது.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பின் தங்கிய பேரினவாத மதவாத பாசிஸ்டுக்கள் பெரும்பான்மை மக்களையே அடிமைகளாகியுள்ளனர். குறைந்தபட்ச சனநாயகத்தை உறுதிப்படுத்தும் அனைத்துக் கட்டமைப்புக்களும் சிதைக்கப்படுகின்றன. இலங்கையின் 20வது திருத்தச்சட்டம் நீதித்துறையை நேரடியாகவே கட்டுப்படுத்துகிறது. நீதித்துறையின் குறந்தபட்ச சுதந்திரமும் தனி மனிதனான நாட்டின் சனாதிபதியின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் அதி உயர் பதவியிலிருக்கும் சனாதிபதியின் ஒரு வருட நிறைவின் போதான உரை அப்பட்டமான பேரினவாதம். ஆனால் சிங்கள மக்களுக்கும் பேரினவாதம் எதிரானது என்பதை இத் தீர்ப்பு வெளிப்படையாகக் கூறுகிறது. பெரும்பான்மை சிங்கள அதிகாரவர்க்கத்திற்கான இனவாதமாகக் காண்பிக்கப்பட்ட இலங்கையின் சனநாயகத்தின் நேர்மறையான கூறுகள் அனைத்தையும் கோத்தாவின் சர்வாதிகார அரசு சிதைத்துக்கொண்டிருப்பதை சிங்கள மக்களுக்கு உணர்த்துவதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் நியாயத்தையும் உணரவைக்கமுடியும்.

Exit mobile version