இனியொரு… சுன்னாகம் அழிவு தொடர்பாக கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக கருத்துப் போரை நடத்திவருகிறது. சுன்னாகம் அழிவின் சூத்திரதாரிகளில் ஒருவரான பிரித்தானிய ஆளும் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை இனியொரு ஆதரித்து பங்களித்தது.
புலம்பெயர் நாடுகளில் தேசியம் வளர்பதாகக் கூறும் ஊடகங்கள், அரசியல் அமைப்புக்கள் போன்ற எவையும் சுன்னாகத்தில் நீரும் நிலமும் அழிக்கப்படுவது தொடர்பாக மூச்சுக் கூட விடவில்லை. இலங்கையிலிருக்கும் ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாக மக்களை ஏமாற்றிய புலம்பெயர் அமைப்புக்கள் தமது கொல்லைப் புறத்தில் உலாவந்த நிர்ஜ் தேவா என்ற அழிவுகளின் சூத்திரதாரியை கண்டுகொள்ளக்கூட மறுத்தன.
இந்த நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், சுன்னாகம் அழிவிற்குக் காரணம் கழிவு எண்ணை வெளியேற்றமல்ல என்ற அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்திருந்தார். அவர் முன்னே ஆய்வுகளும், நேரடி ஆதாரங்களும் காணப்பட அவற்றை நிராகரித்து வெளியிடப்பட்ட அறிக்கை உள் நோக்கங்களைக் கொண்டதா என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன.
விக்னேஸ்வரன் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய போது அதனை ஆதரித்த இனியொரு அவரின் சுன்னாகம் தொடர்பான புனைவுகள் கலந்த அறிக்கையின் பின்னரே விக்னேஸ்வரனை விமர்சிக்க ஆரம்பித்தது.
தனிமனிதர்களது சொந்த வாழ்க்கை தொடர்பாக விமர்சிப்பதைத் தவிர்க்கும் இனியொரு விக்னேஸ்வரனின் அரசியல் தொடர்பாக விமர்சிக்க ஆரம்பித்தது.
சுன்னாகம் பேரழிவை நடத்திய நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ஆதரவாக வெளியான அரசியல் தலைவர் ஒருவரின் முதலாவது அறிக்கை விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையே.
எதிர்பார்த்தது போலவே விக்னேஸ்வரனின் தன்னிச்சையான அறிக்கையின் பின்னர் வடமாகாண சபை நியமித்த நிபுணர் குழு இரண்டு தடவையும் ஏற்கனவே வெளியான அறிக்கைகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், சுன்னாகம் நீரில் கிறீஸ் மற்றும் எண்ணைப் பொருட்கள் இல்லையென போலி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்தி தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் இதுவரை நடந்திராத புதிய அழிவுகளைத் திட்டமிட்ட பல்தேசிய வர்த்தக நிறுவனம் எம்.ரி.டி வோக்கஸ்.
அது தனது தலைமைகத்தை மலேசியாவில் கொண்டுள்ளது. எம்.ரி.டி கப்பிடல் என்ற தாய் நிறுவனத்தின் பிரதான செயற்பாடுகளில் கழிவுகளை வெளியேற்றுவதும் ஒன்றாகும்.
கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் அதிபார டீசலை கடற்பரப்பில் வெளியேற்றக்கூடாது என்பது சர்வதேசச் கடற்பயண சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியேற்றி எரித்து அகற்றும் செயற்பாட்டை எம்,டி,ரி கப்பிட்டலின் துணை நிறுவனங்கள் நடத்திவந்தன.
சுன்னாகத்தில் பயன்படுத்தப்பட்ட அதிபார டீசல் என்பது கப்பல்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உச்சபட்ச நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு டீசலா என்பதை ஆய்வுகளே தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல் நோக்கம்…
இனியொரு… அரசியல் சுயலாபத்திற்காகவே விக்னேஸ்வரனை விமர்சிப்பதாக சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல்களிலும், பின்னூட்டங்களிலும் பலர் தெரிவித்திருந்தனர். அரசியல் இலாபம் என்றால் என்ன? விக்னேஸ்வரனுக்கு எதிராக வாக்குக் கேட்பதுவா இனியொருவின் நோக்கம். அல்லது எங்காவது ஒரு இடத்தில் பணம் பெற்றுக்க்கொள்வதா?
ஒரு பேரழிவை எச்சரிப்பதும், அதனைத் தேசியத்தின் பெயரால் திசைதிருப்புபவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதும் தவறாகாது. அது தேவையானதே.
லைக்கா நிறுவனத்தை விமர்சித்த போது நேரடியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு ஊடகங்களுள் இனியொருவும் ஒன்று. சுன்னாகத்தில் அழிவை ஏற்படுத்திய நிர்ஜ் தேவாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை இனியொருவின் ஆதரவுடன் முன்னெடுத்துவருகிறோம்.
சுமந்திரன் போன்றவர்கள் தமது அரசியலை வெளிப்படையாகவே முன்வைக்கிறார்கள். தாம் பேரினவாத அரசுடன் இணைந்து செயற்படுவதாக அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இங்கு சுமந்திரன் மற்றும் அவர் சார்ந்த அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியல் தலைமையை உருவாக்குவதே இன்று சமூக அக்கறையுள்ளவர்களது கடமை. அவ்வாறான அரசியல் தலைமை ஈழத்தில் தோன்றுவதற்கு ஒடுக்குமுறை உந்துசக்கதியாகும், அதேவேளை தேசியத்தின் பெயரால் அதிகாரவர்க்கத்தின் அடியாட்களாக செயற்படுபவர்கள் அவ்வாறான அரசியல் தலைமையின் தோற்றத்திற்கு தடையாக அமைகிறார்கள். அழிவுகளை மக்கள் அறியாமலே நடத்துகிறார்கள். ஆக, முப்பது வருடங்களுக்கும் மேலான அழிவுகளைச் சந்தித்த நாம் இனிமேலும் புற்றுநொய்களை அனுமதிப்பது தவறானது. கருத்தியல் தளத்தில் அவை எதிர்கொள்ளப்பட வேண்டும்.
தேவையானால் விக்னேஸ்வரனும் அவரது சகபாடியான ஐங்கரநேசனும் தம்மைச் சுய விமர்சனம் செய்துகொண்டு, சுன்னாத்தில் மையப்படுத்தி நடத்தப்படும் அழிவுகளை நிறுத்த வேண்டும்.
எம்.டி.ரி வோக்கஸ் நிறுவனத்திற்கு வட மாகாண சபை பச்சைக்கொடி காட்டியுள்ளது. நாளை எந்த அச்சமுன் இல்லாமல் நாட்டின் எந்தப்பகுதியையும் அந்த நிறுவனம் நாசப்படுத்தலாம்.
உப்பின் விலை அதிகரித்தால் மக்கள் அரசை நொந்துகொள்வார்கள். ஆக, உப்பிலும் அரசியல் உண்டு, நிலைமை அவ்வாறிருக்க முள்ளிவாய்க்காலின் பின்னர் திட்டமிட்டு நடத்தப்படும் சுன்னாகம் பேரழிவில் அரசியல் இல்லை என்பது தவறானது. மக்கள் சார்ந்த அரசியலே அதனை எதிர்கொள்ள முடியும்.
என்ன செய்வது…
இலங்கை அரசின் பகுப்பாய்வுத் திணைக்களம் நடட்திய ஆய்வுகளில் 30 கிணறுகளில் கிரீசும் எண்ணையும் காணப்படுவதாக ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது, வடமாகாண சபை இப்பிரச்சனையில் மூக்கை நுளைப்பதற்கு முன்பே அரச ஆய்வுக்ள் தெளிவாக டீசல் காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆக, இனிமேல் ஆய்வுகள் தேவையற்றவை.
-எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கும் அதன் இயக்குனர்களுக்கும் எதிராக சர்வதேச அளவில் சுற்றுச் சூழல் குற்றவியல் வழக்குகள் தாக்கல்செய்யப்பட வேண்டும்.
-மக்களை அணிதிரட்டி இலங்கை அரசிற்கும் வட மாகாண சபையின் காட்டிக்கொடுப்பிற்கு எதிராகப் போராட வேண்டும்.
-அழிவுகள் நடைபெற்ற போது மின்வலு அமைச்சராகச் செயற்பட்ட பட்டாலி சம்பிக்க ரணவக்கவைப் பதவி விலகக் கோரும் போராடங்கள் நடத்தப்பட வேண்டும்
– நச்சு நீரைச் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கையை எம்.ரி.டி வோக்கஸ் இடமிருந்த நட்ட ஈடு பெற்று மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
– முள்ளிவாய்காலின் பின்னர் நடத்தப்படும் மிகப்பெரிய அழிவு சுன்னாகத்திலேயே ஆரம்பித்துவைக்கப்பட்டது என்ற உண்மை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.