Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பன் கீ மூன் மைத்திபால சிரிசேனவிற்கு தொலைபேசினார்: எங்கே தமிழீழம்?

Secretary General advisors meeting
Secretary General advisors meeting

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் அதனை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட பிரயத்தனம் தொடர்பில் பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாட்டில் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி, சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தொலைபேசி கலந்துரையாடலின் போது பான் கீ மூனிடம் கூறியுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கத் தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாகவும் பான் கீ மூன் இதன்போது கூறியுள்ளார்.

ஐ.நாவையும் அமெரிக்காவையும் கூட்டிவந்து தமிழீழம் பிடித்துத் தருவதாக கடந்த ஆறு வருடங்களாக தமிழ்ப் பேசும் மக்களை ஏமாற்றிய தமிழ்த் தலைமைகளின் சாயம் இப்போது வெளுக்க ஆரம்பித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஐ.நா வரை கொண்டு சென்று தமிழர்களுக்கு விடிவு பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய தமிழர் தலைமைகள் இப்போது அனைத்தையும் மைத்திரிபால சிரிசேனவின் காலடியில் ஒப்படைத்துள்ளனர்.

ராஜபக்சவின் பேரினவாத இராணுவத்தையும் அதே ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பையும் கொண்டுள்ள இலங்கைப் பேரினவாத அரசாங்கத்திடம் ஐ.நா மற்றும் அமெரிக்கா ஊடாக தமிழர்களின் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.

எந்தக் குறிப்பான வேலைத்திட்டமும் இல்லாமல் ஐ.நாவையும் அமெரிக்காவையும் நம்பக் கோரிய தமிழர் தலைமைகள் இன்று தம்மைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும். இதனூடாகவே புதிய அரசியல் தலைமை தோன்றுவதற்கு அவர்கள் வழிவிட முடியும். அவ்வாறன்றெனின் இன்னும் குறுகிய காலத்துள் பாரிய அழிவுகளை மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் சந்திக்க நேரிடும்.

Exit mobile version