தமீழீழ விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் அதன் தொடர்ச்சி தாமே எனக் கூறிக்கொள்ளும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்தின் பெருந்தொகையான சொத்துக்களுக்கு இதுவரை பொறுப்புக் கூறியதில்லை. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் முதலிடப்பட்ட பெருந்தொகையான சொத்துக்கள் தனி நபர்களின் கைகளில் முடங்கியுள்ளது.
வீடுகள், வியாபார நிறுவனங்கள், நிதிவளம் போன்றன புலிகளின் அழிவுடன் காணாமல் போய்விட்டன. புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி என்றும் தமிழர்களின் புதிய தலைமை தாமே என்றும் கூறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற அமைப்புக்கள் புலிகளின் சொத்துக்கள் தொடர்பாக மட்டும் வாய்திறப்பதில்லை. இறுதிக்கட்டப் போரின் போது சேகரிக்கப்பட்ட பெர்ந்தொகையான பணம் தொடர்பான அனைத்துத் தரவுகளுன் மூடி மறைக்கப்படுகின்றன.
ஏனைய அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பதாகக் கூறும் ரீ.சீ.சீ பணம் தொடர்பாக மட்டும் எந்தத் தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கவில்லை எனக் கூறுவது கேலிக்கூத்தாகும்.
இதனால் மக்கள் மத்தியில் ரீ.சீ.சீ போன்ற அமைப்புக்கள் மீதான சந்தேகங்கள் தோன்றின. ஈழத்தில் தமிழர்களின் அவலங்களுக்காகப் போராடுவதாகக் கூறும் ரீ.சீ.சீ, மக்கள் பாதிக்கப்படும் போது எந்தப் போராட்டங்களையும் நடத்தியதில்லை. நடத்தப்பட்ட சில பொதுவான போராட்டங்களிலும் இலங்கை அரசிற்கு எதிரானதும், ஏகபோக அரசுகளுக்கு எதிரானதுமான சுலோகங்கள் முன்வைக்கப்படுவதற்குப் பதிலாக ‘எமது தலைவர் பிரபாகரன், எமது மண் தமிழீழம்’ என சுலோகம் மட்டுமே முன்வைக்கபடும்.
மக்களை விரக்திக்குள் தள்ளிய இந்த அமைப்புக்கள் நடத்தும் போராட்டங்களில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்வதில்லை.
இவ்வாறு போராட்டங்களை அழித்து மக்களை விரக்தி நிலைக்குள் தள்ளிய இந்த அமைப்புக்களின் ஒரே குறி பணம் மட்டுமே. மாவீரர் தின நிகழ்வை வியாபார உக்திகளோடு நடத்தும் இந்த அமைப்புக்கள், மரணிக்காமல் வாழும் போராளிகளின் அவலங்களைக் கண்டுகொள்வதில்லை.
மூடி மறைக்கப்பட்ட பணத்தின் மீதான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளே ரீசீசீ அமைப்பின் உறுப்பினர்களின் துப்பாக்கி மோதல்களின் பின் புதைந்துள்ள காரணம் என சந்தேகிப்பதற்கான அத்தனை நியாயங்களும் எம் மத்தியிலுள்ளன.
தாங்கள் வழங்கிய பணத்திற்கு என்ன ஆனது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. அதனை மறைப்பதற்கு ரீ.சீ.சீ போன்ற அமைப்புக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. தமது முழு நடவடிக்கைகளையும் சுய விமர்சனம் செய்துகொண்டு புதிய அரசியலை புலம்பெயர் அமைப்புக்கள் முன்வைக்கத் தவறினால் ஆயுத மோதல்கள் மேலும் வலுவடைவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
இனப்படுகொலை நடத்திய அதே நபர்களால் ஆளப்படும் அரசு இன்று ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து வட-கிழக்கின் தேசிய இனச் செறிவைச் சிதைத்துவருகிறது. முழு இலங்கையையும் ஏகாதிபத்திய நாடுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவருகிறது. இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் என்பது இன்றைய தவிர்க்க முடியாத முன் தேவையாக உள்ளது. இந்த நிலையில் நேர்மையும் இதயசுத்தியுமுள்ள மக்கள் சார்ந்த அமைப்புக்கள் அவசியமானது மட்டுமல்ல வியாபாரிகள் அரசியல் நீக்கம் செய்யப்படவேண்டும் என்பதும் தேவையானது.