இந்தோனேசியாவில் பாண்டுங் இல் அணி-சேரா நாடுகளின் குழு ஸ்தாபிக்கப்பட்டு 60ஆம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ACCஇன் தொடக்க அமர்வில் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ உரையாற்றுகையில், மூன்று பிரதான சர்வதேச கடன்வழங்கும் அமைப்புகளைச் சாராத ஒரு புதிய உலகளாவிய பொருளாதார ஒழுங்கிற்கு அழைப்புவிடுத்தார்.
“உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மூலமாக உலகின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற கருத்து வழக்கற்று போய்விட்டது, அதை கைவிட வேண்டும்,” என்று அவர் 92 நாடுகளின் பிரதிநிதிகள் கூடியிருந்த அக்கூட்டத்தில் தெரிவித்தார்.
உலகம் பொருளாதாரத்தைத் தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவரும் நோக்குடன் சீனாவினால் உருவாக்கப்பட்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின்(AIIB) ஆரம்ப உறுப்பு நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.
அமெரிக்காவின் தனியாதிக்கம் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான போக்குகளைக் கொண்டுள்ளதால் சீனவின் தலைமையிலான எதிர் முகாம் ஒன்று உருவாகி வருவதை இது காட்டுகின்றது.
மா ஓ சேதுங்கின் மரணத்திற்குப் பின்னர் சோசலிசப் பாதையிலிருந்து பிறழ்வடைந்த சீனா தனது மூலதனத்தை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
புதிய அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிடுகையில். ““உலகளாவிய பொருளாதாரத்தின் தலைவிதி இந்த மூன்று நிதியியல் அமைப்புகளிடம் மட்டுமே விட்டுவிடக்கூடாது என்பது எனது கருத்தாகும். புதிய எழுச்சிபெற்றுவரும் பொருளாதார சக்திகளுக்கு திறந்திருக்கும் ஒரு புதிய பொருளாதார ஒழுங்கை நாம் கட்டமைக்க வேண்டும் என்பது தவிர்க்கவியலாத கட்டாயமாகிறது,” என்று அவர் தொடர்ந்து கூறினார்.