Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழிந்து தொங்கும் மைத்திரிபாலவின் 100 நாள் ஜனநாயகம்: புலம்பெயர் நாடுகளிலிருந்து செல்பவர்களுக்கு அச்சுறுத்தல்

PresidentSirisenaபுலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற அகதிகளும் ஐரோப்பியப் பிரசைகளுக்கும் இலங்கையில் பாதுகாப்பாக நடமாடலாம் என்று நம்பிவிடக்கூடாது. விமான நிலையத்திலும், வெளியிலும் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை செல்ல முற்படுபவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சிறிய விசாரணைகள், கொலை மிரட்டல்களிலிருந்து கைதுகள் வரை இது தொடர்கின்றது.

ராஜபக்ச என்ற அரச பயங்கரவாதியும் அவரின் பரிவரங்களும் சுதந்திரமாக உலாவர, அரச பயங்கரவாதத்திலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளப் போராடியவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். மைத்திரிபாலவின் நூறு நாள் ஜனநாயகமே இவ்வளவு கீழ்த்தரமானது என்றால் எதிர்காலத்தை இலகுவாக எண்ணிப்பார்க்கலாம்.

ஈழத் தமிழர்களுக்கு விமானப் பயணம் இனிப்பான அனுபவமல்ல. புலம்பெயர்ந்து எந்த நாட்டில் குடியுரிமை பெற்றிருந்தாலும் எங்காவது எப்போதாவது தடுத்து நிறுத்தப்ப்பட்டு விசாரணை செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே அவர்கள் பயணம் செய்கின்றனர்.

கொத்துக்கொத்தாக மக்களைப் படுகொலை செய்த கோரமான பயங்கரவாதி ராஜபக்ச அச்சமின்றி இலங்கையின் கதாநாயகனாக வலம்வர முடிகிறது என்றால் அதுவே அப்பாவிகளை அச்சம் கொள்ளச் செய்யப் போதுமானது.

இந்த நிலையில் பிரான்சிலிருந்து இலங்கை சென்ற பகீரதி என்ற தமிழ்ப் பெண்ணும் அவரது குழந்தையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். உடல் நிலை பாதிப்படைந்துள்ள பெற்றோரைக் காண்பதற்காக இலங்கை சென்ற பகீரதி பிரான்சிற்குத் திரும்புவதற்காக விமான நிலையம் சென்ற வேளியில் கைது செய்யப்பட்டார். முன்னை நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான பகீரதி, அந்த இயக்கத்திலிருந்து விலகி பிரான்சில் வசித்து வந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இலங்கை அரச பேரினவாதிகள் அந்த அமைப்பின் அரசியல் வழிமுறையோடு இணைந்து செயற்பட்டவர்களைக் கைது செய்து சிறையிலடைப்பது முற்றிலும் ஜனநாயக மறுப்பாகும். அதுவும் இலங்கையில் வாழாத ஒருவரை அவரது மகளுடன் கைது செய்து சிறைப் பிடிப்பது அரச பயங்கரவாதமாகும்.
மைத்திரிபாலவின் நூறு நாள் ஜனநாயகமே மக்களை இந்தப் பாடுபடுத்துகிறது என்றால் மிகுதி நாட்கள் என்னவாகும்?

Exit mobile version