இதுவரை காலமும் கண்ணை மூடிக்கொண்டிருந்த தமிழக அரசினதும். மோடியின் மத்திய அரசினதும் குரலாக சினிமா வியாபாரிகள் ஒலிக்க ஆரம்பித்தனர். அதனைச் சாட்சியாக முன்வைத்து 23.01.2017 அன்று போலிஸ் கும்பல் வன்முறையில் இறங்கியது. வழமைக்கு மாறாக பொது மக்களின் வாகனங்களுக்குத் தீவைத்த போலிஸ் கும்பல், பொதுச் சொத்துக்களையும் நாசப்படுத்திற்று. இவற்றை போராடும் மாணவர்களே மேற்கொண்டதாகக் கூறி, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திற்று.
முன்னரே தயார்செய்யப்பட்டிருந்த சினிமா வியாபாரிகள் உட்பட்ட தனிநபர்கள் போலிசின் சமூகவிரோதச் செயற்பாடுகளை மாணவர்களின் வன்முறை என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு மாணவர்களின் போராட்டத்தை நிறுத்தக் கோரினர். மாணவர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திய இந்த முகவர்களில் எவரும் இதுவரை போலிசின் சமூகவிரோதச் செயற்பாடுகளைக் கண்டிக்கவில்லை.
மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் எந்த அரசியல் கட்சியையும், பின்புலத்தையும் சார்ந்திருக்கவில்லை. இவ்வாறான சூழலில் மாணவர்களின் போராட்டத்திற்கு அவர்களின் சுயாதீனத்தை ஏற்றுக்கொண்டு கொள்கை அடிப்படையிலான தலைமை வழங்குவது எவ்வாறு என்பதை புரட்சிகர அமைப்புக்கள் மத்தியில் ஆராயப்படவேண்டிய புதிய சூழல் உருவாகியுள்ளது.