Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அம்மா தேசியவாதியான விக்னேஸ்வரன்

cvwickneswaranதமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அவர் இதுவரைகாலமும் ஆற்றிய சேவை அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டமையே அவரின் இந்த வெற்றி. எமது நாட்டின் தமிழ் மக்களும் அம்மையாரின் இந்த வெற்றியால் மனமகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் அடைந்துள்ளார்கள். எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கொள்கை பிறழாமல் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

இவ்வாறு தமிழ்ப் பேசும் மக்களின் பெயரால் தெரிவித்திருப்பது வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன். தமிழ் நாட்டின் உள்ளேயே ஈழத் தமிழ் அகதிகளை விலங்குகளைப் போல நடத்தும் ஊழல் பெருச்சாளி ஜெயலலிதாவிற்கு ஒளிவட்டம் கட்டும் புலம்பெயர் பினாமி விக்னேஸ்வரன் முப்பது வருட மக்களதும் போராளிகளதும் தியாகத்தைக் கொச்சப்படுத்துகிறார். ஒரு புறத்தில் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு மறுபுறத்தில் ஈழப் போராட்டத்தையும் போராளிகளையும் அகதிகளையும் அவமதிக்கும் ஜெயலலிதாவிற்கும் விக்னேஸ்வரனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய விக்னேஸ்வரன் மறுகணமே சுன்னாகம் சார்ந்த பிரதேசம் முழுவதையும் நஞ்சாக்கிய நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக போலி நிபுணர் குழுவை அமைத்தார்.

புலிகள் என்ற பயங்கரவாதிகளை இலங்கை அரசாங்கம் அழித்துக்கொண்டிருக்கிறது என்று ஜெயலலிதா அறிக்கைவிடுத்துவிட்டு 2009 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இனப்படுகொலைக்கு எதிராகப் பேசி ஈழ ஆதரவு வாக்குகளை வென்றெடுக்க முனைந்தார். புலிகள் ஜனநாயகத்தை மறுத்தமையால் தான் இதுவரை அரசியலில் ஈடுபட முடியவில்லை என வடமாகாணத் தேர்தலில் களமிறங்கியவர் விக்னேஸ்வரன், புலம்பெயர் குழுக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக புலி ஆதரவாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

வட மாகாண சபையில் தனது உரையின் போது சுய நிர்ணைய உரிமைக்காக ஜெயலலிதா குரல்கொடுத்ததாகக் கூறும் விக்னேஸ்வரன், சமஷ்டி ஆட்சியே தேவை என சுய நிர்ணைய உரிமைக்கு எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

மேலும் செல்வி ஜெயலலிதா அவர்கள் போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாக இருப்பர் என்ற நம்பிக்கை எமக்குண்டு என விக்னேஸ்வரன் கூறியதை ஜெயலலிதா கேட்டிருந்தால் அவருக்கு அவர் காதுகளையே நம்பமுடியாமல் இருந்திருக்கும். இதுவரை இந்திய வரலாற்றில் மானிலம் ஒன்றில் சாதி வெறிகொண்ட பாசிச ஆட்சியை அமைத்துக்கொண்ட ஜெயலலிதா, மனிதாபிமானிகள், ஊடகவியலாளர்கள், ஜனநாயகவாதிகள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே நடந்தவையல்ல,

தமிழ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உள்நாட்டில் வாழும் தமிழர்களையும் ஒடுக்கத் துணை போகும் ஜெயலலிதாவை புனிதப்படுத்தும் செயல் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு இணையானது.

Exit mobile version