இதற்கு முன்பதாக இலங்கை அரசின் சுகாதார அமைச்சரும். அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ஆவாக் குழுவை உருவாக்கியது கோத்தாபய ராஜபக்சவே எனக் குறிப்பிட்டிருந்தார். கோத்தாபய ராஜபக்ச இதனை மறுத்த போதிலும் தனது தகவலில் உறுதியுடனிருப்பதாக ராஜித மீண்டும் கூறியிருந்தார்.
கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரை எழுக தமிழ் நிகழ்வின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனை முறியடிக்கும் முயற்சியாகவே கைது இடம்பெற்றுள்ளதாக ஊடகச் சந்திப்பு ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்னவை மறைமுகமாகத் தாக்கிய இலங்கை பாதுகாப்பு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆவா குழுவிற்கும் இராணுவத்திற்கும், ஏன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் கூட எதுவிதத் தொடர்ப்பும் இல்லை எனத் தெருவித்திருந்தார். அதேவேளை அக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆக, இலங்கை அரசுக்குள் நிகழும் பனிப் போரிற்கு அலெக்ஸ் பலியாக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆக, ஆவா குழு இலங்கை அரச உள் முரண்பாட்டின் வெளிப்பாடு என்ற சந்தேகங்கள் எழுவது வழமையானது.
இன்று ஆவா குழுவின் தோற்றம் தொடர்பாக ராஜித செனவிரத்ன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முழுமையான விளக்கத்தைக் கோருவதன் ஊடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதன் உறுப்பினரை விடுவிப்பதற்கான வழிகளைத் திறந்துவிடலாம். கைது போலியானது என்பதை ஆவா குழு என்பது இராணுவத்தின் குழந்தை என்று நிறுவுவதன் ஊடாகச் சாதித்துக்கொள்ள முடியும்.
ராஜித இலங்கை அரசின் அதி உயர் செல்வாக்கு வட்டத்திலுள்ள அமைச்சர், ஆவா குழுவை எந்த இராணுவ அதிகாரி தோற்றுவித்தார் என்பது போன்ற அடிப்படை விபரங்கள் அடங்கிய தகல்வல்களை அவர் வெளியிடுவது தவிர்க்க முடியாத ஒன்று.
ஆவா குழுவை முன்வைத்து நடத்தபடும் அரசியல் நாடகத்தை முடிவிற்குக் கொண்டுவர தகவல்களை வெளிப்படையாக மக்கள் மத்தியில் கூறுமாறு இதுவரை எந்தத் தமிழ்க் கட்சியும் கோரவில்லை. குறிப்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கைதான நிலையில் அக் கட்சி இக் கோரிக்கையை முன்வைத்து தகவல்களை மக்கள் மத்தியிக் வெளிக்கொண்டுவருவது அவசியமானதும் அவசரமானதுமாகும்.