உலகில் ஒருபுறம் ஈழ மக்களின் உரிமைப் பேராட்டம் தற்போது ஒடுக்கப்பட்டுவிட்டாலும் மறுபுறம் நேபாள மக்களின் உரிமைப் போராட்டம் ஒடுக்கப்பட முடியவில்லை.இந்தியாவின் தொடர்ச்சியான தலையீடும் ஆதிக்கமும் இருந்தும் நாம் அவற்றையெல்லாம் வெற்றிகொண்டுள்ளோம். போராட்டத்தின் திசைவழியைத் திட்டமிடல் என்பது இதன் அடிப்படையாக அமைந்திருந்தது.
நேபாளத்தில் அரசியல் சாசனத்தை எழுதி முடிப்பதற்கான நாள் என வரும் மே-28ஐ நிர்ணயித்து இருந்தாலும் அவ்வாறு செய்து முடிப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. போராட்டத்தின் முதல் பகுதியான ஜனநாயகப் புரட்சியில் நாம் வெற்றியடைந்துள்ளோம். போராட்டம் இன்னும் தொடர்கிறது என்று தனது உரையாடலை ஆரம்பித்தார் தோழர் லஷ்மண் பந்த்.
நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரான தோழர் லஷ்மண் பந்த் சென்ற மாதம் சென்னை வந்திருந்த போது இது பற்றி அவரிடம் கலந்துரையாடினோம். டெல்லியை மையமாகக் கொண்டு செயற்பட்டுவரும் அவர் Indo-Nepal People’s Solidaily Forum ஐ புனரமைப்பதில் ஈடுபட்டு உள்ளார். சென்னைக்கு வந்திருந்த அவரிடம் தோழர் சபாநாவலன், தோழர் பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர், ‘புதிய போராளி’ இதழ்) பத்திரிகையாளர் அருள் எழிலன் ஆகியோர் உரையாடினர்.
தோழர் லஷ்மண் பந்த் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் சாராம்சம் பின்வருமாறு.
நேபாளம் Climax ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் மே 28 அன்று அரசியல் சாசனம் எழுதி முடிவதற்கான இறுதி நாள் ஆகம். மே 20 வாக்கில் அரசியல் சாசனத்தை எழுதி முடிக்க வேண்டிய காரணத்திற்காக பெரும் மக்கள் போராட்டம் தொடங்கப்படும்.
இதை நசுக்குவதற்காக இந்திய விரிவாதிக்கம் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் அவசரநிலை பிரகடனம் செய்யப்படலாம்
-
இராணுவ ஆட்சி நிறுவப்படலாம்
-
மற்றொரு பொம்மை ஆட்சி அமைக்கப்படலாம்.
நேபாள மாவோயிஸ்ட் கட்சியானது எந்தவொரு விளைவிற்கும் தயாராகவே இருக்கும் நோக்கில் அதற்கான தயாரிப்பில் இருந்துகொண்டிருக்கிறது. முடியாட்சியை ஒழித்து ஜனநாயகக் கூட்டாட்சி குடியரச (Federal Democratic Republic) என்பதை நிறுவிய இக்கட்சியானது இப்பொழுது புதிய ஜனநாயகப் புரட்சி என்ற இலக்கை நிறைவு செய்யும் நோக்கில் இருக்கிறது. 1996ல் தொடங்கப்பட்ட மக்கள் யுத்தமானது முன்வைத்த நோக்கம் இதுவே.
இந்தியத் தலையீடு:
இந்திய விரிவாதிக்கம் மிகப் பெரிய இடைஞ்சலாக இருந்து வருகிறது. ஆணவம் நிறைந்த தலையீடு அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேபாளத்தில் எங்களை புலிகளைப்போல் ஒழிக்க முடியும் எனவும் ஒழிக்க வேண்டும் எனவும் பேசப்படுகிறது. அது முடியாது. ஏனெனில், புலிகளிடம் இருந்த குறைபாடுகளான.
-
மக்கள் திரள்வழி இல்லாமை
-
வர்க்கப் பர்வை இல்லாமை
-
அரசியல் மீது இராணுவவாதம் மேலோங்கியமை
-
சர்வாதிகார மனப்பான்மை.
ஆகியன எங்களிடம் இல்லை.
மேலும் எங்களுக்கு,
(அ) உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவு உண்டு. குறிப்பாக இந்திய புரட்சிகர சக்திகளின் ஆதரவு உண்டு. இது அடிப்படையானது என கருதுகிறோம்.
(ஆ) மக்கள் விடுதலைப் படை (People’s Liberation Army) இருக்கிறது.
(இ) இளங்கம்யூனிஸ்ட் கழகம் (Young Communist Leaged) என்ற துணை இராணுவப் படை இருக்கிறது.
(ஈ) இமயமலைப்பகுதி முதல் தெராய் பகுதிவரை கட்சியின் அடித்தளம் இருக்கிறது.
இந்த நிலைமையில் இந்தியா தலையீடு செய்யுமானால் முழு நேபாளமே எழும். இந்திய விரிவாதிக்கமும் வியட்னாம் தேசிய விடுதலை (அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்த) போரை மறக்காது. இதனால்.
(அ) வீழ்த்தப்பட்ட மன்னர் கியானேந்திராவின் ஆதரவு சக்திகளைப் பயன்படுத்தும்.
(ஆ) பொருளாதார தடையை அமலாக்கும்.
திபெத் விடுதலை போராட்டத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் கொள்கையளவில் ஆதரிக்கிறோம். இந்திய சீன முரண்பாடு சில சந்தர்ப்பங்களில் எமக்குச் சாதகமானதாக இருந்தாலும், சீனாவை ஒரு அப்பட்டமான முதலாளித்துவ சர்வாதிகார நாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இப்பொழுது ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்கிறோம். எதிர்காலத்திலும் ஆதரிப்போம். அவர்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு இலங்கை அரச சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை உலகின் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து முன்னெடுக்கவேண்டும். மக்கள் யுத்தமாக இலங்கையின் புறச் சூழலுக்கு ஒத்த போராட்டமாக முன்னெடுத்தால் சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு வெற்றிகொள்ள முடியும்.
இந்தியாவின் புரட்சிகர சக்திகள் மக்கள் திரள் அடித்தளம் இல்லாமல் மக்கள் இயக்கமாக இல்லாமல் இருக்கின்றன. பேரளவு தியாகம் செய்தும் மக்கள் எழுச்சி இல்லாமல் இருப்பது என்பது கேள்விக்குரியது. எனினும் எத்தகைய வழி மாதிரியை இந்தியப்புரட்சி மேற்கொள்ளவேண்டும் என்பதை இந்தியப் புரட்சிகரச் சக்திகளே தீர்மானிக்க வேண்டும்.
அதே போல், நேபாளத்திற்கு உரிய மாதிரி என்பது பிரத்யேகமானதாகவே இருக்கும். நாடாளுமன்றத்தையோ அமைதி வழிமுறையையோ பயன்படுத்துவது என்பது மிகவும் தற்காலிகமானதே.
தொகுப்பு : பாஸ்கர்
வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழ் ஈழம், இந்தியத் தேசிய வாதிகள் போன்ற வகையறாக்கள் ஏன் நேபாளிகள் வெற்றிபெற்றார்கள் என்று சிந்திக்க மறுக்கிறார்கள்? மக்களை ஏமாற்றத் தானே? நண்பர்களே உங்கள் பணி தொடரட்டும். தமிழ் சமூகம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நீங்கள் தான் புரிய வைத்துள்ளீர்கள்.
இச் செய்தியின் செம்மை பற்றி எனக்கு ஐயங்கள் சில உள்ளன.
ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை நேபாள மாஓவாதிகள் நிபந்தனையின்றி ஆதரிப்பதும் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வுகளை விரும்புவதும் நம்பக் கூடியவை.
இன்னொரு நாட்டில் பிரிவினையை அவர்கள் –ஒரு நிறுவனமாக– ஆதரிப்பது பற்றியே எனது பிரதான ஐயம் உள்ளது.
திபெத்தில் தேசிய இன ஒடுக்குமுறை உள்ளது. ஆனால் பிரிவினைப் போராட்டம் முன்னெடுக்கப் படவில்லை. பிரிவினைக் கோரிக்கை அமெரிக்கத் தூண்டுதலாலேயே தலாய் லாமாவின் ஆட்கள் சிலரால் வற்புறுத்தப் படுகிறது.
அத்தகையதொரு நிலையில் எந்தத் “திபெத் விடுதலைப் போராட்டத்தை” நேபாள மாஓவாதிகள் ஆதரிக்கிறார்கள்?
நானறிய இதுவரை நேபாள மாஓவாதிகள் பிறநாடுகளின் உள் விவகாரங்கள் பற்றிப் பேசுவத்தைத் தவிர்த்தே வந்துள்ளனர்.
“ஈழ விடுதலைப் போராட்டம்” தீவிரமாக நடந்த போது அதை ஆதரித்துப் பேசாத நேபாள மாஓவாதிகள் இப்போது அதை ஆதரிப்தாகப் பேசுவது சற்று வியப்பளிக்கிறது.
நேபாள மாஓவாதிகள் காஷ்மீர், நாகா, மணிபூர் போராட்டங்கள் பற்றிக் கூடப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
அதை விட, உலகில் எங்கேனும் பிரிவினைப் போராட்டங்களை அவர்கள் ஆதரிப்பது, அவர்களுக்கு எதிராக மேற்கு நேபாளத்தில் இந்தியா பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட உதவி செய்யும் என அவர்கள் உணர்வார்கள்.
“சீனாவை ஒரு அப்பட்டமான முதலாளித்துவ சர்வாதிகார நாடாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்றாரா? அல்லது ‘சீனாவை ஒரு முதலாளித்துவ சர்வாதிகார நாடாகவே நாங்கள் பார்க்கிறோம்’ என்றாரா? இவ் வார்த்தை வேறுபாடு முக்கியமானது.
ஏனவே இதிலுள்ள கருத்துகள் சரியாகப் பதியப் பட்டனவா என்பதை உறுதி செய்ய முழு நேர்காணலையும் அல்லது சம்பந்தப் பட்ட பகுதியை அப்படியே வழங்குவது நல்லது.
அடுத்து இக் கருத்துக்கள் ஒருவரின் தனிபட்ட கருத்துக்களா அல்லது கட்சியின் நிலைப்பாடா என்பதையும் உறுதி செய்ய வேண்டி உள்ளது.
//“ஈழ விடுதலைப் போராட்டம்” தீவிரமாக நடந்த போது அதை ஆதரித்துப் பேசாத நேபாள மாஓவாதிகள் இப்போது அதை ஆதரிப்தாகப் பேசுவது சற்று வியப்பளிக்கிறது//
இது தவறான தகவல். ஈழ விடுதலைப் போராட்டத்தின் போதே அவர்கள் ஆதரித்துப் பேசியுள்ளனர். ஈழத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து நேபாள மாவோயிஸ்டுகள் பேசியுள்ளனர். பிரசந்தாவின் பேட்டி கூட வந்துள்ளது.
நன்றி.
இவ்விடத்து “ஈழ விடுதலைப் போரட்டம்” என்பபடுவதற்கும் இலங்கைத் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போரட்டத்துக்கும் ஒரு பாரிய வேறுபாடு உண்டு.
அந்த “ஈழ விடுதலைப் போராட்டம்” ஒரு நிலையிலும் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் சுயநிர்ணயம் பற்றி அக்கறை காட்டியதில்லை.
சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து உலகின் எல்லா மாஓ வாதிகளும் மர்க்சிய லெனினிய வாதிகளும் எப்போதுமே பேசியுள்ளனர்.
நட்புடபன் சிவசேகரம் அவ்ர்களுக்கு,
“பிரிந்த்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம் ஆனால் பிரிந்து போதலை ஆதரிக்கவில்லை என்பது விவாகரத்து உரிமையை ஆதரிக்கிறோம் ஆனால் விவாகரத்தை ஆதரிக்கவில்லை என்பது போலல்லவா இருக்கிறது.” இது லக்ஷ்மன் பந்த் ஐ இன்று தொடர்புகொள்ள முயற்சித்த வேளையில் அவருடைய உதவியாளர் நேரடியாக எனக்குக் கூறியது. அதில் எனக்கு எந்த வகையிலும் முரண்பாடு இல்லை. மிகச் சரியான கருத்து. நேபாள மாவோயிஸ்டுகள் மிகத் தெளிவாக உள்ளனர். ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம் தான் இணைந்து வாழ முடியாது என்ற சூழலில் பிரிந்து போவதற்கான போராட்டத்தை நடத்துவது என்பது தவிர்க்க முடியாதது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை தான் பிரதான முரண்பாடு. அதுவும் அமைப்புமயப்பட்ட பேரிவாததின் பிடியில்.
//நானறிய இதுவரை நேபாள மாஓவாதிகள் பிறநாடுகளின் உள் விவகாரங்கள் பற்றிப் பேசுவத்தைத் தவிர்த்தே வந்துள்ளனர்.
“ஈழ விடுதலைப் போராட்டம்” தீவிரமாக நடந்த போது அதை ஆதரித்துப் பேசாத நேபாள மாஓவாதிகள் இப்போது அதை ஆதரிப்தாகப் பேசுவது சற்று வியப்பளிக்கிறது.//
நேபாள மாவோயிஸ்டுக்கள், தங்கள் தேசத்தின் பின்புறத்தில் ஒரு லட்சம் மக்கள் வரை பேரினவாத அரசியல் நடத்தும் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் அரசின் இராணுவத்தால் கொல்லப்பட்ட பின்னர் அந்தப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவிப்பது என்பது உள்விவகாரங்களில் தலையிடுவது ஆகாது. கம்யூனிசம் என்பது சர்வதேசியவாதமே.
//நேபாள மாஓவாதிகள் காஷ்மீர், நாகா, மணிபூர் போராட்டங்கள் பற்றிக் கூடப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
அதை விட, உலகில் எங்கேனும் பிரிவினைப் போராட்டங்களை அவர்கள் ஆதரிப்பது, அவர்களுக்கு எதிராக மேற்கு நேபாளத்தில் இந்தியா பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட உதவி செய்யும் என அவர்கள் உணர்வார்கள்.// இவ்வாறு குறுகிய தேசிய வாதப் போக்கில் சிந்திப்பார்களானால் அவர்கள் மாவோயிஸ்டுக்களாக இருக்கமுடியாது.
தவிர உலகம் முழுவதும் புரட்சிகர அமைப்புக்களுடனான நேபாள மாவோயிடுக்களின் தொடர்பும் வேலைமுறைகளும் தான் அவர்களின் மேலதிக பலம். தவிர, பொதுத் தளம் ஒன்றி அவர்கள் சொல்லாத ஒன்றை எழுதி பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் எனக்கோ பாஸ்ல்கருக்கோ அருள் எழிலனுக்கோ கிடையாது.
//“சீனாவை ஒரு அப்பட்டமான முதலாளித்துவ சர்வாதிகார நாடாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்றாரா? அல்லது ‘சீனாவை ஒரு முதலாளித்துவ சர்வாதிகார நாடாகவே நாங்கள் பார்க்கிறோம்’ என்றாரா? இவ் வார்த்தை வேறுபாடு முக்கியமானது.// இதிலும் நாங்கள் பொய் சொல்லவில்லை.
//அடுத்து இக் கருத்துக்கள் ஒருவரின் தனிபட்ட கருத்துக்களா அல்லது கட்சியின் நிலைப்பாடா என்பதையும் உறுதி செய்ய வேண்டி உள்ளது.// கட்சியின் மிக முக்கிய பொறுப்பிலுள்ளவர் அதிலும் தென்னாசிய விவகாரங்களைக் கையாளும் ஒருவர் தனிப்பட்ட கருத்தைக் கூறுவதாக நீங்கள் கருதினால் அது அவர்கள் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தையே கேள்விக்குள்ளாகுவதாகும்.
நட்புடன் நாவலன்.
நன்றி.
நான் இங்கே யாருடையதும் பொய் பற்றிக் கூறவில்லை. யாரையுமே குற்றஞ்சாட்டவுமில்லை.
புரிதற் கோளாறுகள், கேள்விகளின் தன்மை உட்பட்ட பல விடயங்களைக் கருத்திற் கொண்டே என் வினாக்கள் எழுந்தன.
இச் செய்தி, இதுவரை நான் அறிந்த நேபாள மாஓவாதிகளின் கவனமான நடத்தையுடன் பெரிதும் முரண்படுவதாலேயே என் ஐயங்களைப் புலப் படுத்தினேன்.
எனவே தான், நேர்காணலின் முழுமையை அல்லது உரிய பகுதியின் முழுமையத் தருவது பல ஐயங்களை நீக்கும்.
மற்ற முக்கிய கேள்வி, சொல்லப்பட்டவை ஒரு மனிதரின் தனிப்பட்ட நிலைப்பாடா அல்லது அமைப்பினதா என்பது.
நேபாளக் கட்சியில் பந்த்தை விட உயர்ந்த மட்டதில் உள்ள ஒருவரது கருத்துக்களை அறிந்ததாலேயே என் ஐயம்.
மேலும், இப்படிப் பட்ட ஒரு விடயத்தில், பொறுப்பான ஒரு கட்சி தனது பொதுவான, குறிப்பான நிலைப்பாடுகளைத் திட்டவட்டமாகத் தனது மாநாட்டு அறிக்கை, அரசியல் அறிக்கைகள் என்பன மூலம் கோடிகட்டிக் காட்டும்.
தீர விசாரித்தறியும் வரை பொறுத்திருப்பேன்.