Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இருபது ஆண்டுகளில் மிக அதிக முறைகேடுகள் நடக்கும் தேர்தல் இது: இலங்கை தேர்தல் கண்காணிப்பாளர்கள்.

இலங்கையில் தேர்தல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வருகின்ற 26ஆம் திகதி அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் கூறுகின்றார்கள்.

கடந்த ஒரு வார காலத்தில் மாத்திரம் 4 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்; இறந்தவர்களில் இருவர் எதிரணியைச் சேர்ந்தவர்கள்; மற்றைய இருவரும் அரசதரப்பு அணியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகளில் இதுவரையில் 39 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். 19 பேர் இந்த வன்முறைகள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிசார் அறிவித்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகளுக்குச் செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது இடம்பெறாத அளவுக்கு முறைகேடுகளும், அத்துமீறல் சம்பவங்களும் இப்போது நடைபெற்றிருப்பதாகக் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

இந்த நிலைமையானது, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதற்காகச் செயற்பட்டு வருகின்ற பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் கவலையையும் தோற்றுவித்திருக்கின்றது.

ஊடகக் கண்காணிப்பு அதிகாரி நீக்கம்

தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில், இலங்கையின் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களை கண்காணிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியை இலங்கைத் தேர்தல் ஆணையர் உடனடியாக விலக்கிக்கொண்டுள்ளார்.

இந்த கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அதிகாரியான ஜெயம்பதி ஹெட்டியாராச்சி தமது பணிகளை முறையாக நிறைவேற்ற அரச ஊடகங்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கூறினார்.

அரச ஊடகங்கள் தேர்தல் ஆணையரின் உத்தரவுகளைப் பின்பற்றாதது குறித்து தேர்தல் ஆணையர் ஏமாற்றமடைந்துள்ளார் என்று இந்த கூட்டத்துக்கு பின்னர் பிபிசியிடம் பேசிய எதிர்க்கட்சி வேட்பாளருக்காகப் பேசவல்ல அனுர குமார திஸ்ஸநாயக கூறினார்.

BBC.

Exit mobile version