எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் எதிரணியின் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கே வலுவான ஆதரவை அளிப்பதாகத் தோன்றுகிறது. இலங்øயின் வட கிழக்கிலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் மேற்கொண்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இந்திய வம்சாவளித் தமிழர்கள் மத்தியிலும் புதிய ஆர்வம் பிறந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதென்ற ஆர்வம் காணப்படுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் தற்போதைய அரசியல் தன்மைக்கான காரணங்கள் பின்வருமாறு;நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 2006, 2007 பகுதியில் இது இடம்பெற்றுள்ளது. சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை பொலிஸ் படையால் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் இடையில் தனித்துவத்தைக் கண்டுகொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் புலிகளை தமது ஏகப்பிரதிநிதிகளாகக் கொண்டவர்களெனக் கருதப்பட்டனர். பொலிஸாரைப் பொறுத்தவரையில் தமிழர்கள் யாவருமே ஒன்றாகவும் சந்தேகத்திற்கிடமானவர்களாகவும் இருந்தனர்.
தென்னிலங்கையின் பூசா சிறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் பயங்கரவாத சந்தேக நபர்களாக நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 300 பேர் சில அரசியல் தலைவர்களின் நடவடிக்கையினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2006, 2007 காலப்பகுதியில் பல இந்திய வம்சாவளி தமிழர் வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்களென சந்தேகிக்கப்பட்டனர் அல்லது அவர்களிடமிருந்து கப்பம் அறவிடப்பட்டது.
சிங்கள வர்த்தகர்களிடம் நெகிழ்வுப் போக்குடன் நடந்துகொள்ளும் வருமான வரி அதிகாரிகள் தங்களுடன் கடுமையாக நடந்துகொள்வதாக நுவரெலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாளி தமிழ் வர்த்தகர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மகிந்த சிந்தனையிலுள்ள கொள்கையின் பிரகாரம் ராஜபக்ஷ அரசாங்கம் மானிய விலையில் உரத்தை வழங்குகிறது. அதேபோன்று மானிய விலையில் தங்களுக்கு உரம் கிடைப்பதில்லையென சிறியளவிலான காய்கறி தோட்ட விவசாயிகள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
உரத்தின் சந்தை விலையும் மானிய விலையும் பாரியளவில் வேறுபட்டுள்ளது. மகியங்கனைப் பகுதிக்கு நாங்கள் சென்று கறுப்பு சந்தையில் உரத்தை மலிவான விலையில் பெற்றுக்கொள்கிறோம். செல்வாக்கு மிக்க ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் சிலர் கறுப்புச் சந்தையை நடத்துகின்றனர் என்று வர்த்தகர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கையினால் சந்தையில் விலை குறைவடைந்து விடுவதாகவும் இதனால் நுவரெலியாவிலுள்ள சிறியளவில் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுவதாகவும் உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடும் ஒருவர் கூறினார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர் ஒருவர் சிறிய துண்டுக்காணிகளை வைத்திருக்கின்றார். அதில் அவர் காய்கறிச் செய்கையில் ஈடுபடுகின்றார். தேயிலைக் கொழுந்து பறித்தல், கூலி வேலை என்பனவற்றில் கிடைக்கும் தமது சிறிய வருவாய்க்கு அப்பால் தமது செலவை சமாளிக்க அவர் காய்கறிச் செய்கையில் ஈடுபடுகின்றனர். உரத்திற்கு அதிக விலைகொடுத்து கொள்வனவு செய்யவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதனால் எனது உற்பத்திகளை நாம் அதிகளவு விலைக்கே சந்தைப்படுத்த வேண்டியுள்ளது. இதனால் அவற்றை விற்க முடியாமல் உள்ளது என்று உருளைக் கிழங்குச் செய்கையில் ஈடுபடும் ஒருவர் கூறினார்.
வர்த்தகப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு மேலதிக வருமானத்தைப் பெறுவதற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறியளவு காணித்துண்டுகள் வழங்கப்படுமென்பது பிரகடனப்படுத்தப்பட்ட அரச கொள்கையாகும். ஆனால், இந்திய வம்சாவளி மக்களுக்கு உண்மையில் இவ்வாறு காணி வழங்கப்பட்டது. மிக சொற்ப அளவிலாகும். இதனை ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் மலையக அபிவிருத்தி சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்திய வம்சாவளித் தமிழர்களும் தோட்டத் தொழிலாளர்களும் பாரம்பரியமாகவே ஐ.தே.க.
விற்கு ஆதரவு அளித்து வந்தவர்களாகும். ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. பொன்சேகாவை ஆதரிக்கிறது. இதனால் இந்திய வம்சாவளித் தமிழர்களும் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியமான விடயமல்ல. பாரம்பரியமாகவே ஐ.தே.க.வானது மத்திய, மேல் மாகாணத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் வலுவானதாக இருந்துவருகிறது. இந்தப் பகுதிகளில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே தேர்தல்களில் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஆசனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய வம்சாவளித் தமிழர்களின் கட்சிகள் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவது வழமையாக இருந்து வருகிறது. ராஜபக்ஷவின் பக்கத்திலிருந்து பொன்சேகாவின் தரப்புக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செல்லுமென அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் ஏப்ரலில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க.வின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக இந்நடவடிக்கை இடம்பெறலாமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த ஆர்.யோகராஜன், என்.சச்சிதானந்தன் ஆகியோர் பொன்சேகா தரப்பிற்குச் சென்றுள்ளனர். கொழும்பைத் தளமாகக் கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்கனவே ஐ.தே.க.வுடன் உள்ளது.