18.12.2008.
இனப்பிரச்சினைக்காக தீர்வு யோசனையொன்றை சமர்ப்பிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தனது 100 ஆவது கூட்டத்துடன் கலந்துரையாடல்களை நிறைவு செய்து இந்த வருட இறுதிக்குள் தனது யோசனை அறிக்கையைத் தயாரித்து முடிப்பதென தீர்மானித்திருக்கிறது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூடிய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அதில் கலந்துகொண்ட முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே தீர்வு யோசனைக்கான 90சதவீத இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் நிலையில், பொதுவாக குழுக்கூட்டங்களில் கலந்து கொண்ட கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் விடயங்களுடன் இணக்கப்பாடு எட்டப்படாத 10 சதவீதமான விடயங்களை தனித்தனியாக வேறுபடுத்தி அறிக்கையிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்தப் பிரதிநிதி கூறினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு தற்போது தனிப் பாராளுமன்றம் மட்டுமே இருப்பதை மேல் சபை , கீழ்சபை என இரு கட்டங்களாகப் பிரித்தல். இதில் கீழ் சபைக்கு மாகாண ரீதியாக சகல இனங்களையும் சமமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா 7 பிரதிநிதிகளை தெரிவு செய்தல், விகிதாசார முறை மற்றும் தொகுதிவாரி முறை என இரண்டையும் சரிபாதியாக கலந்த ஜேர்மன் முறையை ஒத்த தேர்தல் முறை சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற பல விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனினும் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டி ஆட்சி முறையா என்பதில் இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை. சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றையாட்சி தவிர்ந்த பிறிதொரு முறைக்கு அதாவது ஐக்கிய இலங்கைக்குள் அல்லது பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு என்பதற்குத் தயாராக இருக்கின்றன. எனினும் ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள் இதற்குத் தயாராக இல்லை. ஒற்றையாட்சி என்பதே அவர்களின் நோக்காக இருக்கிறது.
அத்துடன் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம், மலைநாட்டுத் தமிழ் மக்களுக்குத் தனி அரசியல் அதிகார அலகு போன்ற சில யோசனைகள் தொடர்பாகவும் இணக்கம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் 4 கூட்டங்கள் மட்டுமே அதாவது , எதிர்வரும் 22 ஆம் , 23 ஆம் , 29 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் 4 கூட்டங்கள் மட்டுமே நடைபெறவிருப்பதாகவும் இதில் 29 ஆம் திகதி நடைபெறவிருப்பது குழுவின் 100 ஆவது கூட்டமென்றும் தெரிவித்த அந்தப் பிரதிநிதி இந்த வருட இறுதிக்குள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனை அறிக்கையைத் தயாரித்து முடித்துவிடுவதென தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
யோசனை அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டு விட்டாலுமே அதை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பது எப்போதென்பது குறித்துக் குழுவின் தலைவரான அமைச்சர் விதாரணவே முடிவு செய்வாரென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.