அனுஷா என்ற இந்த மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த மூன்று இராணுவத்தினர் இவர்களைத் துரத்தியுள்ளனர்.
அதன் போது மற்றைய சிறுமி ஓடித் தப்பிவிட அனுஷா என்ற இந்த ஒன்பது வயது சிறுமி அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டார்.
இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்ட மாணவி அந்தரங்க உறுப்புக்களில் இரத்தம் வடிந்த நிலையில் தள்ளாடியபடி வீட்டை வந்தடைந்திருக்கிறார்.
சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் அவரை உடனடியாக மாவடி வேம்பு வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.
மாலை ஆறு மணியளவில் இச்சிறுமியின் வீட்டிற்குச் சென்ற இருகுற்றப்புலனாய்வுப் பிரிவினர் சிறுமியின் உள்ளாடைகளை பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். பெப்.13ம் திகதி சனிக்கிழமை சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளால் அரச அதிபருக்கும் பொலிஸ் அத்தியட்சருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக தாம் நான்கு இராணுவத்தினரை கைது செய்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் தெவித்துள்ளார்.
விசாரணை என்ற பெயரில் அச்சிறுமியை இராணுவத்தினரும் பொலிஸாரும் அச்சுறுத்தி உள்ளதாகவும் இராணுவ சீருடையைக் கண்டாலே அச்சிறுமி அச்சத்துக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இச்சிறுமியின் பெற்றோரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.