இதுகுறித்து அதன் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மரபணுக்களின் தன்மையையும், வரிசையையும் மாற்றியமைத்து உருவாக்கப்படும் மரபீனி மாற்றப் பயிர்களை உரிய ஆய்வின்றி இந்திய அரசு அனுமதித்து வருகிறது. இது ஆபத்தானது. மரபீனி மாற்றப் பயிர்கள் சாகுபடிச் செலவு பன்மடங்கு அதிகரித்து, உழவர்களை கடனாளியாக்கி, கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மராட்டிய மாநிலம் விதர்ப்பாவிலும், ஆந்திரத்திலும் மரபீனி மாற்றப்பயிரான பிட்டி பருத்தியை சாகுபடி செய்த உழவர்கள் கழுத்து முட்டும் கடனில் சிக்கி, பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் பிட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் பேரிழப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏனெனில் மரபீனி மாற்றப்பயிர்களின் விதையிலிருந்து அதற்கென்று தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி, ஊக்கிகள் வரை அனைத்தும் அதிகம் செலவு கொண்டவை. அந்த அளவிற்கு உரிய விளைச்சலும், விலையும் உழவர்களுக்கு கிடைப்பதில்லை.
மரபீனிப் பயிர்கள் ஓவ்வாமை, மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, ரத்த உறைவைக் குறைப்பது, சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இதேபோல் அழிவை ஏற்படுத்தும் மரபீனி மாற்றப் பயிர்கள் அனைத்தையும் தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்