Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

70ஆயிரம் கோடி டாலர் உதவி:அமெரிக்க செனட் ஒப்புதல்

அமெரிக்க நிதி நெருக்கடியைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர் நிதி அளிக்கும் அதிபர் புஷ்ஷின் பரிந்துரைக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் “சப் பிரைம்”எனப்படும் வீட்டுக் கடன் திரும்ப வராததால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயின.

அதைத் தொடர்ந்து லேமன் சகோதரர்கள் நிதி நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் திவாலாயின. இதனால் அமெரிக்க பங்குச் சந்தை கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. புள்ளிகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலித்தது.

அமெரிக்க நிதி நெருக்கடியைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர் வழங்குவதற்கான ஆலோசனையை அதிபர் புஷ் பரிந்துரைத்தார். இத்திட்டத்தை பிரதிநிதிகள் அவை நிராகரித்தது.

தற்போது சில திருத்தங்களுடன் இதை அமல்படுத்தலாம் என செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது பிரதிநிதிகள் அவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

செனட் சபையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 40 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 33 உறுப்பினர்களும் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேசமயம் ஜனநாயக கட்சியின் 9 உறுப்பினர்களும், 15 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் இதை எதிர்த்து வாக்களித்தனர்.

நிதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது, வங்கிகள் நிதி திரட்டும் அளவு ஒரு லட்சம் டாலரிலிருந்து 2.5 லட்சம் டாலர் வரை திரட்டலாம் என்பன செனட் சபையால் திருத்தப்பட்ட தீர்மானங்களாகும்.

இந்த தீர்மானத்துக்கு பிரதிநிதிகள் அவை ஒப்புதல் அளிக்கும் என்று நம்புவதாகவும், பின்னர் இத்தீர்மானம் அதிபர் புஷ்ஷுக்கு அனுப்பப்படும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரிச் சலுகை அளிக்கப்பட்டதன் மூலம் வரி செலுத்தும் 2 கோடி நடுத்தர மக்கள் பயனடைவர்.

Exit mobile version