இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக 48 மணி நேரம் போரை நிறுத்துவதாக அதிபர் ராஜபக்சே அறிவித்து உள்ளார்.
வற்புறுத்தல்
இலங்கையில் முல்லைத்தீவு நகரை கைப்பற்றியுள்ள சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பகுதிகளை கைப்பற்றுவதற்காக இறுதிக்கட்ட தாக்குதலை தொடங்கி உள்ளது.
ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான மோதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதால் இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
21/2 லட்சம் தமிழர்கள்
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சுமார் 21/2 லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும், அவர்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது. மனித உரிமை குழுக்களும் இந்த புகாரை கூறுகின்றன.
இந்த சூழ்நிலையில், ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தினால் ஏராளமான அப்பாவி தமிழர்கள் உயிர் இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசிவிட்டு டெல்லி திரும்பிய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், போர் முனையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் கவலையை ராஜபக்சேயிடம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர், பாதுகாப்பு பகுதிக்கு அப்பாவி தமிழர்கள் வருவதற்கு அனைத்து தரப்பினரும் அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
48 மணி நேர போர் நிறுத்தம்
இந்த நிலையில், இலங்கை அரசு நேற்று இரவு திடீர் என்று 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இதுகுறித்து அதிபர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கையில் போர் நடந்து வரும் வடபகுதியில், அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ராணுவம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை குவித்து இருக்கிறார்கள். ஏவுகணை தளங்களையும் அமைத்து உள்ளனர். அந்த பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர்.
அனுமதிக்க வேண்டும்
எனவே, அந்த பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவர்களை விடுதலைப்புலிகள் அனுமதிக்கவேண்டும். இதற்காக விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேரம் இலங்கை அரசு கால அவகாசம் அளிக்கிறது. அதாவது 48 மணி நேரம் `கெடு’ விதிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இலங்கை அரசு 48 மணி நேரம் அவகாசம் அளித்து இருப்பதால், இந்த `கெடு’ முடியும் வரை அதாவது 48 மணி நேரத்துக்கு அந்த பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தாது.
இந்தியா வரவேற்பு
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இலங்கை அரசு கால அவகாசம் அளித்து இருப்பதை இந்தியா வரவேற்று உள்ளது.
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் கூறுகையில்; இலங்கை அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். இதன் மூலம் போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.