திரைக்கதையில் லாலும் ரோகிணியும் பிரிவதற்கான காரணம், குடியும் குடும்ப அக்கறையின்மையுமே என்று கொண்டு சென்றிருந்தால் பரவாயில்லை. போலீஸ்காரர்கள் ரோகிணியிடம் பொய்யுரைத்தபடி, சாராவை நினைத்து ஏங்குவதால் என்று சொல்வது வலுவாய் இல்லை. லாலும் ரோகிணியும் சாரா குறித்து ஏற்கெனவே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
படம் இறுதி நோக்கிச் செல்லும்போது, சோகங்கள் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. மகனின் பொறுப்பற்ற அடாவடியும் சிறைசெல்லலும், ரோகிணியின் மறைவு, மைத்துனனின் அவமதிப்பு, மகளின் விபச்சாரம் என்று. லாலின் ஒழுக்கம் குறித்த கேள்வியினாலேயே ரோகிணியும் அவரது அண்ணனும் மிகக் கடுமையான விமர்சனத்துடன் லாலைப் பிரிகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பையனைப் போக்கிரியாகவும் பெண்ணை விபச்சாரியாகவும் ஆகும்படி வளர்த்திருக்கிறார்கள் என்பது நம்பும்படி இல்லை.
தான் விபச்சாரியாவதற்கான பொருளாதார நிர்ப்பந்தங்களை அப்பெண் ஊர்க்காரர்களிடம் சொல்வது வெறும் சாட்டையடி வசனங்களாகவே இருக்கின்றன. சாட்டையடி லாலுக்குமானது என்பது மட்டுமே திரைக்கதையில் அடுத்து அவர் இறந்து போவதற்கு இட்டுச்செல்ல உதவுகிறது.
படம் பல இடங்களில் வசனங்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. லாலின் நினைவுகூரல்கள் என்ற வகையில் அவரது வசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரோகிணியின் மனக்குமுறல்கள் என்ற வகையில் அவரது வசனங்கள் இயல்பானவை. பிருத்விராஜின் வசனங்கள் கூடுதலாகத் தெரிகின்றன, அத்தகையவர்கள் அதிகம் பேசுவார்கள் என்ற போதிலும்.
திரைக்கதையில் பிருத்விராஜ் உள்நுழையும் இடங்கள் அற்புதமானவை. தெய்வாதீனமானவை போல ஒரு மறைத்தன்மையோடு அமைந்திருந்தன – பென்ஹரில் ஜீஸஸ் வந்து போவது நினைவுக்கு வந்தது. அதனால்தான் அப்பாத்திரத்துக்கு கூடுதல் வசனங்கள் நெருடுகின்றன. சாராவின் கணவன் மரத்தில் தொங்கும்போது போலீஸ்காரன் பேச, பிருத்விராஜ் பேச்சேதும் இல்லாமல் கனத்த முகத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பொருள் பொதிந்தது. அடுத்து வரும் காட்சிக்கு உக்கிரம் சேர்க்கிறது. பண்ணையாரின் பிணம் காட்டப்பட்ட விதமே போதுமானது. மீண்டும் அது ஒரு ஃபிளாஷ்பேக்காக அந்த சண்டைக் காட்சி நீளமானது.
இறுதியில் தேங்காய்த்தொட்டிக் கைவிளக்கோடு பிருத்விராஜ் வந்து லாலை அழைத்துச் செல்லும காட்சி கவித்துவமானது. நல்லவேளையாக அக்காட்சியில் வசனங்கள் குறைவானவையாக இருந்தன.
மன உளைச்சலில் குடிகாரனாகி குடும்பத்தை இழந்தபின், குடும்ப வாழ்வின் அர்த்தம் இல்லாது போகிறது லாலுக்கு. வேலையை இழந்தபின் வேலைச் சூழலும் இல்லாது போகிறது. சூழ்ந்திருக்கும் சமூகத்தோடு ஒட்டில்லை. எதிலும் தன் இருப்பின் நியாயம் இல்லாமலாகும்போது, தன் வாழ்வை மாற்றிய அச்சம்பவம் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. பிருத்விராஜ் மட்டுமே அர்த்தம் தருபவனாகிறான் என்ற உணர்த்தல் அருமையாக இருக்கிறது. அவனை முதலில் எதிர்கொள்வது தான் பயணிக்கும்போது தெருச்சூழலில் என்றாலும், பிறகு ஒரு போலீஸ்காரன் என்ற முறையிலேயே அவனை எப்போதும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதும் போலீஸ்காரன் என்ற முறையிலேயே கொல்ல வேண்டியிருப்பதும் கடைசிக் காட்சியில் போலீஸ் சீருடையில் பிருத்விராஜைப் பின்பற்றிச் செல்வதை விளக்குகிறது.
லாலின் மன இயக்கத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் காட்சி அது. ‘நிலவொளி இருக்கிறது, விளக்கு தேவையில்லை’, என்று லால் கூறுவது அர்த்தம் பொதிந்தது. அதற்கு முன்பெல்லாம் பிருத்விராஜ் லாலிடம் நிறையப் பேசியிருக்கிறான். இப்போது அழைத்துச் செல்ல வரும்போது ‘போகலாமா’ என்பதும் ‘இதோ புறப்பட்டுவிட்டேன்’ என்பதும் சுருக்கமான எளிய வசனங்களின் வலிமை. ‘நிலவொளி இருக்கிறது, விளக்கு தேவையில்லை’ என்பது அடுத்த வீச்சு. லாலின் பின்தொடரல் கேள்விகளைத் தவிர்த்ததாகிறது. விளக்கு தேவையில்லை, எல்லாம் தெளிவாக இருக்கிறது. விளக்கு விட்டுச்செல்லப்படுகிறது. இனி யாருக்காக என்ற கேள்வி பார்வையாளனுக்குள் எழுகிறது.
இறுதியில் லால் பிணமாய்க் கிடக்க, தேங்காய்த்தொட்டிக் கைவிளக்கு வீட்டுத் திண்ணையில் காணப்படுவது கதை குறித்த உரையாடலைத் தொடரச் செய்வதோடு மட்டுமல்லாமல், இறப்புக்கும் இருத்தலுக்கும் இடையில் ஓர் இணைவைக் கொடுத்து பார்வையாளனைச் சிக்கலுக்குள்ளாக்கும் கலைநோக்கம் கொண்டது என்றளவில் அற்புதமானது.
ஆனாலும் அந்தத் விளக்கை ஒரு பெண் வந்து எடுத்துப் பார்த்து வியப்பது தேவையற்றது. இது நேரடியான அர்த்தத்துக்கே இட்டுச் செல்லும். கலை என்றளவில் இது மிகையானது. ஏனென்றால் அவ்விளக்கின் இருப்பு பார்வையாளனின் உணர்வுத் தூண்டலுக்கானது. ஏனைய பாத்திரங்களின் விசாரணைக்கானதல்ல. ஏனைய பாத்திரங்களின் வியப்புக்கானதாக அது ஆகும்போது கதைத் தர்க்கத்துக்குள் வந்துவிடுகிறது. நமது பாரம்பரிய ஆவி நம்பிக்கைகள் அர்த்தம் பெறும் வாய்ப்பே அதிகம். பிருத்விராஜும் லாலும் பாலத்தின் மீது செல்வதை அந்தப் பெண் பார்ப்பதாய் காட்டியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அதைப் பார்க்க வேண்டியது பார்வையாளன்தானே தவிர ஏனைய கதாபாத்திரங்கள் அல்ல.