Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கள மக்களை எதிர்க்கும் ‘வீரம்’! தரகு முதலாளிகளைக் கண்டு கொள்ளாத ‘அறம்’!!

ரசியல் ரீதியான கோரிக்கைகளைக் கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு. இவர்கள் தமிழ் என்றோ இல்லை ஈழத்தமிழர்களை தொப்புள் கொடி என்றோ எந்த அளவுக்கு உருகி பேசுகிறார்களோ அந்த அளவுக்கு தமிழுக்கும், ஈழத்திற்கும் சமாதி கட்டப்படும்.

கருணாநிதி அஞ்சி அஞ்சி நடத்திய டெசோ மாநாட்டினால் ஏதும் செல்வாக்கு உயர்ந்து விட்டதோ என்றெண்ணிய ஜெயலலிதா போட்டியாக இராணுவப் பயிற்சியை விரட்டும் வேலையை எடுத்தார். ஆனால் இலங்கை நட்புறவு நாடு, இராணுவப் பயிற்சியை தொடர்ந்து கொடுப்போம் என்று மத்திய அரசு வெளிப்படையாக கூறியதும் அதை கண்டன அறிக்கைகளாகவோ இல்லை வெற்றுப் புலம்பல்களாகவோ மட்டுமே அ.தி.மு.க மற்றும் தி.மு.கவால் கடந்து செல்ல முடிகிறது.

பழ நெடுமாறன் முதலான தமிழனவாதிகளோ கருணாநிதியை எதிர்ப்பதற்கு மட்டும் ஈழப்பிரச்சினையை பேசுகின்றனர். மற்றபடி ராஜபக்சேவை காப்பாற்றிய ஐ.நா தீர்மானத்தையோ, இல்லை அதன் பொருட்டு இந்தியா கொண்டு வந்த திருத்தங்களையோ மனதார பாராட்டிய தமிழினவாதிகள் டெசோ மாநாட்டால் பலனேதுமில்லை என்று புலம்புவது நல்லதொரு நகை முரண்! கருணாநிதியாவது தனது இயலாமையை, தோல்வியை, இதற்கு மேல் என்ன செய்ய முடியுமென்று ஒத்துக்கொள்கிறார். தமிழினவாதிகளோ இலக்கற்ற அட்டைக்கத்தி வீரத்தையே மாபெரும் போர் என்று சுய இன்பம் அடைகிறார்கள்.

இலங்கைக்கு இராணுவ பயற்சியை அளிக்கும் இந்தியாவை கண்டிக்க வக்கற்ற ஜெயலலிதா அடுத்து இலங்கை கால்பந்து வீரர்கள் போன்ற பலவீனமானவர்களை துரத்தி தனது வீரத்தை பறைசாற்றிக் கொண்டார். இதே வீரம் இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களையோ, அல்லது ஐ.பி.எல் போட்டிகளுக்காக சென்னை வந்து ஆடிய அந்த நாட்டு வீரர்களை விரட்டுவதில் காட்ட முடியுமா? இந்திய தரகு முதலாளிகள் ஏலமெடுத்திருக்கும் அணிகளில் ஆடும் இலங்கை வீரர்களை ஒரு போதும் ஜெயலலிதா மட்டுமல்ல ஏனையோரும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்த்தால் அவர்களுக்கு படியளக்கும் அம்பானி, இந்தியா சிமெண்ட்ஸ், வாடியா, சஹாரா போன்ற பகவான்கள் கோவித்துக் கொள்வார்கள்.

ஆக உண்மையில் சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மீக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள். வேளாங்கண்ணி, பூண்டி மாதா ஆலயங்களுக்கு வந்த மக்களை நாம் தமிழர், வைகோ கட்சியினர் மாபெரும் ‘போர்’ செய்து விரட்டியிருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் எனும் தலையே வீரதீரமாக ஆடும்போது இந்தக் குட்டி வால்கள் இப்படிக்கூட ஆடவில்லை என்றால் எப்படி?

இலங்கை இராணவத்திற்கு பயற்சி அளிப்பது மட்டுமா இந்தியா செய்கிறது? முள்ளிவாய்க்கால் போரையே எல்லா உதவிகளோடும் நடத்தியது இந்தியாதானே? அதைக் குறிப்பிட்டு இந்திய அரசை அம்பலப்படுத்தி மக்களிடம் இயக்கமெடுக்க வேண்டியதற்கு பதில் இந்திய அரசிடமே கோரிக்கை வைத்தவர்கள்தான் நெடுமாறன், வைகோ முதலான தமிழினவாதிகள். இதன் நீட்சியாகத்தான் ராஜபக்சேவை தனிமைப்படுத்தி எதிர்ப்பதற்கு பதில் அப்பாவி சிங்கள மக்களை பகைத்துக் கொண்டு ராஜபக்சேவின் கரங்களை வலிமைப்படுத்துகிறார்கள்.

இதே காலத்தில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஏர்ஜெட் நிறுவனம் மதுரை டூ கொழும்பு விமான சேவையை ஆரம்பித்திருக்கிறது. சீமானோ மற்ற தமிழ்ப்புலிகளோ சன்.டிவியினை இந்த இலங்கை சேவையை தடுத்து நிறுத்த துப்பிருக்கிறதா? நானோ காரின் முதல் வெளிநாட்டு சேவையை கொழும்புவில் ஆரம்பித்திருக்கும் டாடாவை நிறுத்தக் கூறும் தைரியம் உண்டா? இல்லை ஏர்டெல்லிருந்து பல்வேறு முதலாளிகள் இலங்கையில் கால் பதித்திருக்கிறார்களே அதைத்தான் அகற்ற முடியுமா?

மாறாக இந்திய இலங்கை முதலாளிகளின் மாநாடே அரசு ஆதரவுடன் இங்கே பகிரங்கமாக நடக்கிறது. இப்படி இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும் இலங்கையோடு வைத்துள்ள அரசியல் பொருளாதார உறவின் ஒரு அங்கமாகத்தான் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் அங்கே ஒடுக்கப்படுகிறது. இதை புரிந்து கொண்டால் நாம் கொடுக்க வேண்டிய அடி இந்திய தரகு முதலாளிகளை நோக்கி இருக்க வேண்டும். இங்கு அடித்தால் வலிக்க வேண்டியவர்களுக்கு வலிக்கும். அதை விடுத்து அப்பாவி மக்களை அடித்து துரத்துவதால் ஆவதென்ன?

_____________________________________________

சிங்கள மக்களை எதிர்க்கும் ‘வீரம்’! தரகு முதலாளிகளைக் கண்டு கொள்ளாத ‘அறம்’!!

Exit mobile version