Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

300 அப்பாவிகள் பலி ?: உக்கிரமடையும் அரச பயங்கரவாதம்!

அரசாங்கம் பாதுகாப்பு வலயமாக அறிவித்த முல்லைத்தீவு உடையார் கட்டு பிரதேசத்தில் படையினர் இன்று அதிகாலை முதல் மேற்கொண்டு வரும் கடும் எறிகணை தாக்குதல்களினால் காயமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சையின்றி உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 

அனைத்துப் பொது மக்களும் சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக பதுங்குகுழிகளில் மறைந்திருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. உடையார்கட்டு பிரதேசத்திற்கு இடம்நகர்த்தப்பட்ட மருத்துவமனை முற்றாக சேதமடைந்துள்ளது.
 

கடந்த 24 மணி நேரத்தில்  300 பொதுமக்கள் வரை  உயிரிழந்ததுடன் 4 நோயாளர் காவு வண்டிகளும் சேதமடைந்துள்ளன. பதுங்குகுழிகளில் உள்ள மக்களை பாதுகாக்க உதவுமாறு மருத்துவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

இலங்கை படையினர் மக்களை பாதுகாப்பு வலய பகுதியில் வைத்தே படுகொலை செய்து வருவதாகவும் காயமடைந்தவர்களுக்கு உதவ எவரும் இல்லாத நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

படையினர் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமாறு அறிவித்திருந்தனர். பொதுமக்கள் படையினரிடம் பகுதிகளுக்கு செல்ல தயாரில்லை. பொது மக்களை அடக்கி தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல வைக்கும் முனைப்புகளையே படையினர் மேற்கொண்டுள்ளனர். 
 

வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு இலட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45  மணி முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் – முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந்திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை – உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version