08.10.2008.
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 28 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுமே ஏற்க வேண்டுமெனவும் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, குண்டுத் தாக்குதல் நடந்து ஓரிரு மணித்தியாலத்துக்குள் பொலிஸார் மேலெழுந்த வாரியாக புலிகளின் தாக்குதல் எனக் கூறி விவகாரத்தை திசை திருப்பி மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
இப்படுகொலைகள் இடம்பெற்று சூடு தணிவதற்குள் கருணா அம்மானுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பரிசளிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ரணில் விக்கிரமசிங்க பிரிட்டிஷ் சிறையில் தண்டனை அனுபவித்த ஒருவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருப்பது பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கே இழுக்கான செயற்பாடெனவும் விசனம் தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
அநுராதபுரம் குண்டு வெடிப்பில் பலியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 28 பேர்களதும் மரணத்துக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுமே ஏற்க வேண்டும். ஜானக பெரேராவுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தியிருந்தால் இந்த அவலத்தைத் தவிர்த்திருக்க முடியும்.
அவர் எதிர்த் தரப்பில் இருந்தமையால் அவர் மீது மகிந்த ராஜபக்ஷ வன்மம் பாராட்டியதன் காரணமாக பெறுமதி மிக்க சொத்தை நாடு இழந்து விட்டது.
வடமத்திய மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜானக பெரேராவை அரசு பக்கம் வருமாறும் மாகாண சபையின் முதலமைச்சர் பதவியையும் மேலதிக வசதிகளையும் பெற்றுத் தருவதாகவும் கூறி அழைத்ததாகவும் அதனை அவர் முற்றாக நிராகரித்து விட்டு உடனடியாகவே எனக்கு தொலைபேசி மூலம் அறியத்தந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ஜானக பெரேராவுக்கு அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு நாம் பல தடவைகள் கோரியும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. பதிலாக ஜானக பெரேராவுக்கு புலிகளோ வேறு எந்தத் தரப்பினாலுமோ அச்சுறுத்தல் கிடையாதென பாதுகாப்புத் தரப்பும், அரசும் அடித்துச் சொல்லி வந்தன. தனது பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது உயர் நீதிமன்றம் அதி உச்ச பாதுகாப்பை வழங்குமாறு தீர்ப்பு வழங்கியும் கூட அரசு அதனை பொருட்படுத்தாமல் பாரபட்சமாகவே நடந்து கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் இந்தப் போக்கில் நடந்து கொண்ட அரசும் பாதுகாப்புத் தரப்பும் திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு குண்டுத் தாக்குதல் நடைபெற்று இரண்டு மணி நேரம் கூட கடப்பதற்குள் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்று கூறமுற்பட்டது. ஆரோக்கியமானதொரு விசாரணை நடைபெறுவதற்கு முன்னதாக எடுத்த எடுப்பில் பொலிஸார் முடிவெடுத்திருப்பதன் மூலம் படுகொலையின் மூலகாரணத்தை மூடி மறைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஜானக பெரேராவின் இழப்புக்கு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மட்டுமன்றி பொலிஸ் மா அதிபர், வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் பொறுப்புக் கூற வேண்டும். சம்பவம் இடம்பெற்ற ஓரிரு மணி நேரத்துக்குள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அரசு ஊடகங்கள் மூலம் விடுத்த அறிவிப்பில் கூட்டம் நடப்பது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கவோ பாதுகாப்பு கோரவோ இல்லையென பொய் கூறியுள்ளார். இதிலிருந்து ஏதோவொரு விடயத்தை மூடி மறைக்க அவர் முயற்சித்திருப்பது தெரியவருகின்றது.
கடந்த 3 ஆம் திகதி மாலை 3.10 மணியளவில் வடமத்திய மாகாண சபை கடிதத் தலைப்பில் எதிர்க்கட்சித் தலைவரின் (ஜானக பெரேராவின்) இணைப்புச் செயலாளர் டி.முனசிங்க அநுராதபுர பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதம் போதிய சாட்சியாகவுள்ளது. அக்கடிதத்தில் வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம், 87/313 தர்மபால மாவத்தை, அநுராதபுரம் என்ற விலாசத்தில் அமைந்திருப்பதாகவும் அதன் திறப்பு வைபவம் 06.10.2008 காலை 6.30 மணிக்கு சுப வேளையில் இடம்பெறுமெனவும் அதனையடுத்து காலை 8 மணிமுதல் 10 மணிவரை நடைபெறும் கூட்டத்தில் பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பெற்றுத் தருமாறு கோரப்பட்டுள்ளது.
அந்தக் கோரிக்கையின் படி பொலிஸ் பதிவேட்டில் 4149/2008 என்ற இலக்கத்தின் படி கூட்டத்துக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு 24993 இலக்க உதயகுமார (சார்ஜன்ட்) 61958 பண்டார, 54410 விஜேசிங்க, 34825 பண்டார ஆகிய பொலிஸ் கான்ஸ்டபிள்களும் நியமிக்கப்பட்டதோடு அவர்கள் அந்த இடத்துக்கு வருகை தந்து கடமையில் ஈடுபட்டுமுள்ளனர்.
இவ்வளவும் நடந்த நிலையிலும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இந்த விடயங்களை உரிய சாட்சியங்களுடனும் அத்தாட்சியுடனும் பிரதமரிடம் ஒப்படைத்துள்ளேன்.
அடுத்து ஜானக பெரேரா படுகொலை செய்யப்பட்டு சூடு தணிவதற்குள் சட்ட விரோத ஆயுதங்களுடனும் சகபாடிகளுடனும் நடமாடும் பெயரளவில் ஜனநாயக வழிக்குத் திரும்பியதாக கூறப்படும் கருணாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பரிசளிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை பாராளுமன்றத்தை அபகீர்த்திக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாகும். 400க்கும் மேற்பட்ட பொலிஸாரையும் அப்பாவி பொதுமக்களையும் படுகொலை செய்தவர் தண்டிக்கப்படாமலேயே பாராளுமன்றம் வருவது பாராளுமன்றத்தைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது.
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் அரச தலையீடில்லாத வெளிப்படைத் தன்மை கொண்ட விசாரணைக்குழுவொன்றின் மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றன. அவுஸ்திரேலியாவின் அல்லது வேறு ஏதாவது சர்வதேச நாட்டின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது வரவேற்கக் கூடியது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்’ எனவும் ரணில் தெரிவித்தார்.