கருணாநிதி தலைமையில், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும்; Tamil Eelam Supporters Organisation (TESO) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அமைப்பின் குறிக்கோள்
பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம்; மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணிஅணியான
அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச்
செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
தீ ர் மா ன ம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25ஆம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு; போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும்; வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வ தேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு
வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும்; இந்துக் கோவில்கள், கிறித்துவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள்பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு; கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது; நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின்
அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு; ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும். தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை
சாத்தியமாகி உள்ளது.
தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட, ஐ.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும்; அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும்; இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.