முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த இராணுவ அதிகாரி அமெரிக்காவுக்கு தப்பி சென்றுள்ளார். அங்கு தங்கியிருக்கும் இவரிடம் அமெரிக்க புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று சாட்சியத்தை பதிவு செய்துள்ளது. சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள இலங்கையின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே என்றும் ‘ரெலிகிராப்’ கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் இலங்கை இராணுரவ அதிகாரிகள் சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல் கூறியுள்ளார்.
இவரது இந்தச் சாட்சியம், இலங்கைப் படையினர் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்’ சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர் சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி ஒருவருக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சில கட்டளைகளை பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி கொன்று விடுமாறு கூறியதாகவும் அமெரிக்காவில் உள்ள இராணுவ மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும், ஜனாதிபதி மகிந்தவும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது.’ என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார் என ரெலிக்கிராப் தெரிவித்துள்ளது.
2
005 இல் பாதுகாப்புச் செயலராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் ‘தாக்குதல் அணி’ யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
ரெலிக்கிராப் வெளியிட்டிருக்கும் இத்தகவலை லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.