Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு!

சுயாதீன கலை, திரைப்பட கழகம்-
ரொறொன்ரோ.

 2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது”  திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமையுடன் அறியத்தருகிறது.

சுயாதீன கலை, திரைப்பட கழகம் வருடா வருடம் மாற்று ஊடகத்திற்காக தங்களது பங்களிப்பை செய்தவர்களை “ஃ விருது” என்னும் விருதை அளித்து கௌரவிப்பது வழமை. கடந்த ஆண்டுகளில் நாடகர் பாலேந்திரா, ஊடகவியலாளர், நாடகர் பி.விக்னேஸ்வரன், கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் போன்றோருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
 
2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” பெறும் திரு. டொமினிக் ஜீவா, கடந்த 45 வருடங்களாக மல்லிகை என்னும் இலக்கிய சஞ்சிகையை இலங்கையில் இருந்து வெளியிட்டு வருகின்றார். இச் சஞ்சிகையில் இன்றைய முண்ணனி எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளனர். கால் நடையாகவும், மிதிவண்டியிலும் ஊர் ஊராக சென்று இப் பத்திரிகையை இவர் விநியோகித்துள்ளார் என்பது எத்தகைய இடைஞ்சல்களுக்கிடையில் இவர் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்துள்ளார் என்பதற்கு சான்று பகர்கின்றது.
 
1927 ஜூன் 27ல் பிறந்த இவர் 1966ல்  மல்லிகையின் முதலாவது இதழை வெளியிட்டார். தமிழிலக்கியத்தின் முக்கியமான சஞ்சிகைகளில் மல்லிகையின் இடம் முக்கியமானது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ் மக்கள் அனைவருக்கும் சார்பாக குரல் கொடுத்த இவர், சாதியம் போன்ற சமூகத்தின் மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் உரத்து குரல் பதித்தவர். திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு ‘ஃ விருதை” அளிப்பதில் சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமிதப்படுகின்றது.
 
அமைப்பின் சார்பாக
திரு. ராம் சிவதாசன்
416-804-3443

இவரது நூல்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்

* தண்ணீரும் கண்ணீரும் (சிறுகதைகள், 1960)
* பாதுகை (சிறுகதைகள், 1962)
* சாலையின் திருப்பம் (சிறுகதைகள், 1967)
* வாழ்வின் தரிசனங்கள் (சிறுகதைகள்)
* டொமினிக் ஜீவா சிறுகதைகள் (சிறுகதைகள்)

கட்டுரைத் தொகுப்புக்கள்:

* அனுபவ முத்திரைகள்
* எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
* அச்சுத்தாளினூடாக ஒர் அனுபவ பயணம்
* நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
* முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

மொழிபெயர்ப்பு நூல்

* UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு:கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)

ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்:

* டொமினிக் ஜீவா – கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
* மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
* பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)

Exit mobile version