Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

2005 இல் பிரபாகரனின் முடிவு சரியானது: ஆனால் செய்தது பிழையானது! – சிறிதுங்க ஜயசூரிய

srithunga1தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்க்கடிக்கும் அதே நேரம் அதற்கு மாற்றீடாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மலையகம் தென்பகுதி என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவைத் தோற்கடிக்கும் எண்ணத்துடனும் இத் தேர்தலுடன் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோசத்துடனுமே உள்ளதாகவும் கூறினார்.

கடந்த 1994 ஆம் ஆண்டும் இதே போன்றதான கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்த நிலையிலையே மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு விடிவு வேண்டுமென்று ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் சந்திரிக்கா வந்தும் எந்தவித விடிவும் கிடைக்கவில்லை. இதே போன்று தான் மகிந்த தோல்வியுற்று மைத்திரிபால வந்தாலும் எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இதற்கு மேற்படி இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் 50 வீதமான வாக்குகளை அளிக்காமல் விடுவதே காலத்தின் தேவையாகும்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் குறித்த இரண்டு பிராதான வேட்பாளர்களையும் நிராகரித்து 50 வீதமான வாக்குகள் கிடைக்காமல் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினது வலுவினை தெரியப்படுத்தவேண்டும்.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள பஸ்ரியான் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை மாலை நடாத்தப்பட்ட ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது…

‘இந்த முறை நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலானது சென்ற முறையையும் விட மாறுபட்டதாகவே இருக்கின்றது. இத் தேர்தலை நாங்களோ ஏன் எந்தப் பிரஜையும் கோரவில்லை. இத் தேர்தல் நடத்துவதற்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற நிலையில் அவசரப்பட்டு ஐனாதிபதி நடத்துவதன் அவசியம் என்னவென்றால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையும் பதவி ஆசையுமே ஆகும்.

அதாவது தேர்தல் ஐனவரி 8 ஆம் திகதி நடைபெற்றால் மஹிந்த வெல்லுவார் என்று ஜோதிடர் கூறியிருப்பதால் அவரின் வேண்டுகோளுக்கு அமைய தேர்தல் அவசரப்பட்டு நடாத்தப்படுகிறது.

ஆனால் ஜோதிடர்கள் சொல்வது பொய் என்பதுடன் மஹிந்தவின் தோல்வியும் உறுதியாகவே தெரிகிறது. அந்த நாள் ஊடகவியியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாளாகும். ஆகவே அன்றைய நாள் மகிந்தவிற்கும் மறைவு நாளாக அமையலாம்.

தற்போதுள்ள தேர்தல் நிலைமைகளைப் பார்க்கும் போது தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இங்கு கலவரங்கள் ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது. அதாவது பலவிதமான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் என்னுடைய கட்சிக் கூட்டத்தையும் குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் தொடர்ந்தும் வாழ்வதனை மக்கள் விரும்பவில்லை.
இதனாலேயே மஹிந்த ஆட்சியை ஒழித்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் தீர்மானித்திருக்கின்றனர். ஆனால் அதிலும் பிரச்சனை இருக்கின்றது. மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி யாரை ஆதரிப்பது என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த 1994 ஆம் ஆண்டு அட்டுழியங்கள் நிறைந்த ஆட்சி நடைபெற்று வந்த போது அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டுமென கோரி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவை ஐனாதிபதியாக்கினர். ஆனால் அவர் வந்தும் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் குறிப்பாக சமாதானமோ அல்லது இனப்பிரச்சனைக்குத் தீர்வோ எவையும் ஏற்படுத்தப்படவில்லை.
அதே போன்று தான் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் அமர்த்தி எமக்கு ஏதுவுமே கிடைக்கப் போவதில்லை. இந்த இருவருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

ஏனெனில் மஹிந்த மீண்டும் பதவிக்கு வந்து செய்வாரென நம்பவும் முடியாது. மைத்திரி தன் தேர்தல் விஞஞாபனத்தில் கூட தமிழ் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கும் திட்டம் தொடர்பில் ஏதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனாலும் மஹிந்த ராஐபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும்.

ஆனாலும் சந்திரிக்காவை கொண்டு வந்து ஏமாந்தது போல் மைத்திரியையும் கொண்டு வந்து ஏமாறக் கூடாது. ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனக் கோருகின்றேன். மகிந்த மைத்திரி இந்த 2 பேருடைய போட்டியும் பெரும்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுவதை காணமுடிகிறது.

இதனையே கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூறியிருந்தார். இத் தேர்தலானது எங்களுக்கான போட்டி அல்ல. தென்பகுதியில் நடக்கும் போட்டி. ஆகவே தமிழ் மக்கள் நாங்கள் இதிலிருந்து விலகுவோம் என்றார். ஆனால் அவ்வாறு பிரபாகரன் கூறியது சரி ஆனால் செய்தது தவறு.

ஆகவே நாம் இதனைச் சரியாகப் பயன்படுத்தி குறித்த 2 பேரையும் ஆட்டங்காணச் செய்து தமிழ் முஸ்லிம் மலையகம் ஏன் தென்பகுதி மக்களையும் இணைத்து எமது பலத்தைக் காண்பிப்போம்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கள மக்களை சுயநிர்ணைய உரிமைக்கு ஆதராவாக அணிதிரட்டுவதும் போராடுவதுமெ  சிறிதுங்க ஜயசூரிய போன்றவர்கள் முன்னாலுள்ள கடமை. தமிழ்ப்பேசும் மக்கள் சுயநிர்ணைய உரிமையைக் கோரிப் போராடுகிறார்கள் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றுதான். அதற்கான நியாயத்தை சிங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதே இன்றுவரைக்கும் அவசியமானதாக இருந்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தலைமைகள் அற்ற நிலையில் அவர்களை வாக்குப் பொறுக்குவதற்குப் பயன்படுத்தாமல் சிறிதுங்க தனது கூட்டங்களைச் சிங்களப்பகுதியில் சுயநிர்ணய உரிமைக்கான நியாயத்தைக் கோரி நடத்தவேண்டும்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்
Exit mobile version