Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

20 வது திருத்தச்சட்டம் : அழிவிற்கான புதிய ஆரம்பம்

20th-amendment-1இலங்கை அரசியலில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைக்கான குரல் என்பது தீர்மானிக்கும் காரணியாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இலங்கையின் அதிகாரவர்க்கமும் அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்திய நாடுகளும் உறுதியாகவுள்ளன. இதன் ஒரு பகுதியாக தேர்தல் முறையில் மாற்றம் செய்யும் 20 வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படவிருப்பதாக இலங்கை வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பும் அதன் தேர்தல் முறையும் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக் கூட உதவாதவை என்பதை 1977 ஆம் ஆண்டிலேயே மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

1989 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வெற்றிபெற்று 1977 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவரானார். அவரது கட்சி இலங்கையின் இரண்டாவது பிரதான கட்சியானது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளைக் கூட அமிர்தலிங்கத்தால் வென்றெடுக்க இயலாமல் போன போதே ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பித்தன.

அமிர்தலிங்கம் முதல் விடுதலை இயக்கங்கள் வரை இலங்கை அரச பாசிசத்தால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களைக் கூட அரசின் ஆதரவாளர்களாக மாற்றும் இனவாதத்தயே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்றனர். இதனால் இலங்கை அரசுகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் பலமடைய விடுதலை இயக்கங்கள் வெற்று இராணுவக் குழுக்களாக மாறின.

இதன் மறு சுற்று இப்போது ஆரம்பித்துள்ளது. பாராளுமன்ற வழிமுறை சாத்தியமற்றது என எண்ணிய இளைஞர்கள் 70 களில் ஆயுதம் ஏந்தினார்கள். இன்று அவ்வாறு ஒரு வழிமுறையே கிடையாது என இலங்கை அரசு கூற முற்படுகிறது.

20 வது திருத்தச் சடம் ஏன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்கள் எதுவும் இதுவரை இலங்கை அரசு முன்வைகவில்லை.

தேர்தல் திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குப் பாதிப்பு எற்படும் வகையில் எதனையும் மேற்கொள்ள மாட்டேன் என மைத்திரிபால தெரிவித்துள்ளதாக மனோகணேசன் கூறுகிறார். இதுவரை திருத்தச்சட்டத்தை எதிர்த்துவந்த மனோகணேசன் இப்போது மைத்திரிபாலவின் தூதராக வெளிவந்துள்ளார்.

20 வது திருத்தச்சடமா தமிழர்களின் இன்றைய தேவை? குறைந்தபட்சம் வட கிழக்கு இணைப்புக் குறித்து 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை நிறைவேற்றிவிட்டு 20 திருத்தசட்டத்திற்கு செல்லுங்கள் என கேட்பதற்குக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தக் கட்சிக்கும் திரணியில்லை.

தவிர, திருத்தச்சட்டத்தின் வரைபில் பொதுவாக ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள பௌத்த அடிப்படைவதிகளைக் கொண்ட கட்சியின் உறுப்பினர்களே அதிகமாகப் பங்களித்தனர். ஆரம்பத்திலேயே பேரினவாதிகளின் தயாரிப்பில் உருவான திருத்தச்சட்டத்தை வலுவான காரணங்களுடன் நிராகரிப்பதற்கு வலுவான அரசியல் தலைமைகள் கிடையாது.

இந்த நிலையில் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுங்கள் என பன் கீ மூன் தொலைபேசியில் மைத்திரிபாலவை ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஆக, உலகின் ஏகபோக அதிகாரவர்க்கங்கள் இணைந்து சிறுபான்மைத் தேசிய இனங்களையும் ஜனநாயக வாதிகளையும் மிரட்டும் ஆயுதமாக 20 திருத்தச்சட்டம் அமைகிறது .

Exit mobile version