இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசு பேரிடர் மீட்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.
விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது.
வனப் பகுதியில் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யாத்ரிகர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான அந்தப் பாதையில் வந்த ஒரு ஜீப் திடீரென நின்றுவிட்டது என்றும், அதை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்ததாகவும் ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று தெரிகிறது.
மிகவும் குறுகலான பாதை என்பதால் ஆம்புலன்ஸ்களோ வேன்களோ செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை. 102 சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. செல்போன்களும் ஓலிபரப்பு கோபுரம் இல்லாததால் செயலிழந்தன.
விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மீட்பு, உதவிக் குழுவினர் விரைந்தனர். கோட்டயம் மருத்துவக் குழுவினரும் உதவிக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் பீர்மேடு, கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வல்லரசாக வளர்கிறோம் என மார்தட்டிக்கொள்ளும் இந்திய மேட்டுக்குடிகள் ஏழை மனித உயிகள் குறித்து எந்த அக்கறையும் கொள்வதில்லை. இந்திய ஊழல் சாம்ராஜ்யத்தின் இன்னொரு அழிவு இது.
இதே வேளை திருச்சியின் அருகேயுள்ள பெரம்பலூரில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.