Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இறுதி யுத்தத்தின் போது 58 ஆவது படையணித் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திரா வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பக்கமிருந்து சரணடைய வரும் எவரையும் சுடுமாறு உத்தரவிடப்படவில்லை, அக்காலப் பகுதியில் எவரும் சுடப்படவில்லை என இறுதி யுத்தத்தின் போது 58 ஆவது படையணித் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திரா வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்த மேஜர் ஜெனரல் சவேந்திரா மேலும் தெரிவிக்கையில், வெள்ளைக்கொடியோ, கறுப்புக் கொடியோ எதுவும் காட்டிக் கொண்டு சிவிலியன்கள் வரவில்லை, அவர்கள் வெறும் கைகளுடனேயே சரணடைய வந்தார்கள்,  அவ்வாறு சரணடைந்தவர்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சவேந்திரா இறுதிக்கட்ட நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்கையில், 2009 மே மாதம் 18 ஆம் திகிதி இறுதி மண்ணை மீட்டெடுத்தோம், 58 ஆவது படையணி இரவு ஒரு மணிக்குத் தாக்குதலை மேற்கொண்டு குறுகிய நேரத்துக்குள் ஒரு லட்சம் பேரையும் மீட்டெடுத்தது. 500 மீற்றர் எல்லையைக் கட்டுப்படுத்தி வெற்றியை ஈட்டமுடிந்தது, பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம் என்பன அனுமதித்த இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி மற்றும் சில ஊடகங்கள் அப்பகுதியில்; செயற்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.
சரணடைவு பற்றித் தெரிவித்த போது, முதலில் பெண் புலி ஒருவர் சரணடைந்தார். அடுத்து காயமடைந்த நிலையில் மற்றொரு பெண் புலி உறுப்பினர் சரணடைந்தார். மூன்றாவதாக ஆசிரியை சரணடைந்தார். அதனைத் தொடர்ந்தும் சரணடையும் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களும் புலிகளும் சரணடைந்தனர். வெள்ளைக்கொடியோ கறுப்புக் கொடியோ எவரும் ஏந்தி வரவில்லை. வெறும் கையுடனேயே வந்தார்கள். யார் வந்தாலும் அவர்களை ஏற்பதே எமது செயற்பாடாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
வன்னி யுத்தத்தின் போது 58 ஆவது படையணித் தளபதியாக கடமையாற்றிய  மேஜர் ஜெனரல் சவேந்திரா தற்போது ஐ.நா.விலிருக்கும் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தில் வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்டு வருகிறார்.

Exit mobile version