Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

18 வது திருத்தம் – குடும்ப சர்வாதிகாரத்திற்காக : செந்தில்வேல்

இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இன்றிருப்பதை விட மோசமான இருள் சூழ்ந்த எதிர்காலமாகவே அமையப் போகின்றது. அதற்கான முன் அறிவிப்பாகவே நிறைவேற்றப்பட இருக்கும் அரசியலமைப்பிற்கான பதினெட்டாவது திருத்தம் காணப்படுகிறது. இத் திருத்தத்தில் காணப்படும் ஒவ்வொரு அம்சமும் இதுவரை மக்கள் அனுபவித்து வந்த அற்ப சொற்ப சுதந்திரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் குழி தோண்டிப் புதைப்பதாகவே அமைந்துள்ளது. அதே வேளை இன்றிருப்பதையும் விட அப்பட்டமான ஃபாசிச சர்வாதிகாரத்தை செயற்படுத்துவதற்கு இத் திருத்தம் வழி வகுக்கின்றது. இதன் உள்ளடக்க அபாயத்தை உணராது மக்கள் ஏனோ தானோ இருப்பதானது அதற்கான பாரிய விலைகளைச் செலுத்த வேண்டிய அபாயத்தையே உருவாக்கும் இத்தகைய தனிநபர் சர்வாதிகாரத்தை வலுப்படுத்த முன் நிற்போரும் துணை போவோரும் நாட்டிற்கும் உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் மனமறிந்த துரோகம் செய்பவர்களாகவே இருப்பர். ஆதலால் அவசர அவசரமாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபடவுள்ள அரசியலமைப்பிற்கான பதினெட்டாவது திருத்தத்தின் உள் நோக்கங்களைப் புரிந்து கொண்டு மக்கள் அதனை எதிர்த்து நிராகரிக்க வேண்டும் என்பதையே எமது புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி வற்புறுத்தி நிற்கிறது.

இவ்வாறு மேற்படி கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், கொலனித்துவ காலத்திலும் அதன் பின்னான காலத்திலும் கொண்டுவரப்பட்ட அனைத்து அரசியலமைப்புகளும் முழு நாட்டின் உழைக்கும் மக்களினதும் தேசிய இனங்களினதும் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவைகளாக அமைந்திருந்ததில்லை. அவை நாட்டின் சொத்து சுகம் படைத்தோரினதும் சுரண்டும் வர்க்கத்தினதும் அவர்கள் பக்கத்தில் இருந்து வந்த ஏகாதிபத்திய சக்திகளினதும் நலன்களையும் வேவைகளையும் நிறைவேற்றும் அடிப்படைகளையே கொண்டிருந்தன. அந்த வகையிலேயே தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ஜே.ஆரினால் தனிக்கட்சி தனிநபர் சர்வாதிகார நடைமுறைகளைக் கொண்டதாகக் கொண்டுவரப்பட்டது. கடந்த முப்பத்திரண்டு வருடங்களாக அதன் கீழ் இந்த நாடும் அனைத்து மக்களும் அனுபவித்த கொடுமைகள் தொடரானவைகளாகும். அத்தனைய அரசியலமைப்பை முற்றாகவே மாற்றியமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளி விட்டு மேலும் தனிக்ப் கட்சி தனிநபர் சர்வாதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் மட்டுமன்றி குடும்ப ஆட்சியை நீடித்துச் செல்லும் உள்நோக்கத்துடனேயே இப் பதினெட்டாவது திருத்தம் கொண்டுவரப்படு;கிறது.
எனவே இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இத்திருத்தத்தை எதிர்த்து நிற்க வேண்டும். இன்றைய அரசியலமைப்பதை முற்றாக மாற்றி அமைக்கும் பாதையில் ஜனநாயகத்தையும் மக்கள் நலன்களையும் வென்றெடுத்துப் பாதுகாக்கும் வகையில் நேர்மையான இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட முன்வரல் வேண்டும் எனவும் வற்புறுத்துகிறது எனப் புதிய-ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version