இலங்கை அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இனச் சுத்திகரிப்பையும்நிகழ்த்திக் கொண்ருக்க தமிழ்ப் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படியில் முகம்கொடுக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்க யாருமற்றநிலையிலேயே காணப்படுகின்றனர்.
ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள் இலங்கை அரசாலும், அதன் பின்புலத்தில் செயற்படும் ஏகாதிபத்திய அரசுகளாலும் அவற்றின் புலம்பெயர் நீட்சிகளாலும் திசைதிருப்பப்படுகின்றன.
நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராமத்தின் காட்டுப்பகுதியில் உள்ள பிரதேசத்திலேயே இந்த சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெடுங்கேணி பிரதேசத்தில் நைனாமடுவில் இருந்து அனந்தர்புளியங்குளம் செல்லும் வீதியில் உள்ள அடர்ந்த காடு காணப்படுகின்றது. இது வெடிவைத்தகல்லு, மருதோடை, அனந்தர்புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சார்ந்துள்ளது. இது வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேசமாகிய நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தமிழ்ப்பிரதேசத்தின் கீழ் வருகின்ற பகுதியாகும்.
இங்கு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை வலிந்து மேற்கொள்வது திட்டமிட்ட அரசியல் நோக்கம் கொண்ட, தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை சிங்கள மயமாக்குகின்ற ஒரு முயற்சியாகவே நாங்கள் பார்க்;கின்றோம்.
இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்ற காரணத்திற்காகவே அரசாங்கம் இரகசியமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றது.
தமிழ்ப்பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதற்கு முன்னரும் நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற இடத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு அந்த இடத்திற்குச் சிங்களப் பெயரும் சூட்டப்பட்டுவிட்டது.
நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கென்ற் மற்றும் டொலர் பண்ணைகளும் சிங்களக் குடியேற்றத்திற்காக அராசங்கத்தினால் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று மனிக்பாம் முகாமில் தங்கியிருந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருந்த போதிலும், தனிக்கல்லு என்ற கிராமத்திற்குரிய வயல்காணிகளில் சிங்கள மக்கள் விவசாயம் செய்வதற்கு இராணுவம் அனுமதித்திருந்தது.
தமது சொந்தக் காணிகளில் விவசாயம் செய்வதற்காக உழவு இயந்திரங்களுடன் சென்ற ஊர் மக்களை இராணுவத்தினரும் சிங்கள விவசாயிகளும் விரட்டியடித்தனர். இதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பையும் தனது ஆட்சேபனையையும் தெரிவித்ததையடுத்து சர்ச்சைக்கு மத்தியில் தனிக்கல்லு கிராமத்தைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள் இவ்வருடம் அங்கு விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்து, ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். இது குறித்து ஜனாதிபதியினால் விளக்கம் கேட்கப்பட்டபோது, இந்தப் பிரதேசம் பல வருடங்களுக்கு முன்பே மகாவலி எல் வலயத்திற்கென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள காணி ஆணைக்குழு, இந்தக் காணிகளைத் தேவைப்படும்போது அரசாங்கத்தின் தேவைகளுக்காகப் பயன்படுத்துவோம் என தெரிவித்திருக்கின்றது.
நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கனகராயன்குளம் ஆற்றின் தென்பகுதியில் பெருமளவு பிரதேசம் முழுதும் மகாவலி எல் வலயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் காணி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கோ அல்லது அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அரச நிர்வாகிகளுக்கோ தெரியாத வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த வகையிலும், தமிழ்ப் பிரதேசத்திற்குரிய காணிகளை அரசாங்கம் தன்னிச்சையாக அரசியல் நோக்கங்களுக்காக சிங்களக் குடியேற்றத்திற்குப் பயன்படுத்துவதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களை இல்லாமல் செய்கின்ற ஒரே நோக்கத்திற்காகவே தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றங்களை இந்த அரசு மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளுமானால், இனங்களுக்கிடையில் ஒருபோதும் நல்லிணக்கமோ நட்புணர்வோ ஏற்படமாட்டாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.