இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். புளொட் ஆகியன, டெலோ ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
* முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைகளை மாற்றி வெலிஓயா என்னும் புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்குவதன் மூலம் அந்த மாவட்டத்தி;ன் இனவிகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையில் கசப்புணர்வையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்துக.
* போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிற்கும் நிலையில், காணிப்பதிவு என்னும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மோசடியான நில அபகரிப்புச் செயற்பாடுகளை உடன் நிறுத்துக.
* வடக்குகிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் காணி, வீடுகள் அற்று நிர்க்கதியற்ற நிலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ குடியேற்றங்கள் மற்றும் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக இன ஒற்றுமையைக் குலைக்கும் செயற்பாட்டினை உடன் நிறுத்துக.
மேற்குறிப்பிட்டுள்ள விடயங்கள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாக அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தினை ஈர்ப்பதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7 மணிக்கு அடையாள உண்ணாவிரதத்தினை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இலங்கை அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் இலங்கை தழுவிய போராட்டமாக இதனை முன்னெடுப்பதென்பது மிகவும் பொருத்தமானதாக அமையும். இதுவரை இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் அடிவருடிகளாகச் செயலாற்றிய கட்சிகள் இலங்கை அரசிற்கு உண்மையில் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமா என்பது கேள்விக்கிடமானதே.