யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 144 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிப்றி தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :
பிறருக்கு அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் யாழ். மாவட்டத்தில் 33 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகளவாகக் கோப்பாய் பொலிஸ் பிரிவில் 10 பேரும், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 6 பேரும், வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களவு மற்றும் வீடு உடைத்துக் களவு எடுத்த குற்றச்சாட்டில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சூழல் மாசு உட்பட டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேரும் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் 3 பேரும் பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டில் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் குற்றச்சாட்டுக்களின் தன்மைக்கு ஏற்ப பிணையில் விடுவிக்கப்பட்டும், விளக்கமறியலில் வைக்கப்பட்டும் உள்ளனர். என்றார்.