Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

13 மணிநேரம் கடும் மோதல்கள் :இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்கள்.

19.10.2008.

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சுமார் 13 மணிநேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.மோதல்களின் போது படையினருக்கும் உதவும் வகையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களும் அப்பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் பிரதான இலக்குகள் சிலவற்றின் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

இம்மோதல்களின் போது இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்ககளை அடுத்து விடுதலைப் புலிகளின் 3 கிலோமீற்றர் நீளமான அணைக்கட்டொன்று உட்பட 14 பதுங்கு குழிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம்பெற்றன. அதிகாலை 5மணிமுதல் சுமார் 13 மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளன.

மோதல்களின் போது இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் பல ஏற்பட்டதுடன் மேலும் பலர் படுகாயங்களுக்கும் இலக்காகிய நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து மோதல்களில் ஈடுபட்ட இராணுவத்தின் 57ஆவது படையணியினரால் அக்கராயன்குளம் பகுதியைச் சுற்றி விடுதலைப் புலிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்த 3 கிலோமீற்றர் நீளமான அணைக்கட்டொன்று கைப்பற்றப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 14 பதுங்கு குழிகளும் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை கிளிநொச்சி நாச்சிக்குடா வன்னேரிக்குளம் மணியன்குளம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் ஆந்தன்குளம் பகுதிகளிலும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களின் போதும் இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளனர். இம்மோதல்களின் போது புலிகளின் பிரதான நிலைகள் சிலவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Exit mobile version