25.08.2008
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், அதிகார பகிர்விற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் போதாது என்ற நிலைப்பாட்டை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பிரதிநிதிகள் எட்டியிருப்பதாக குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இதேநேரம், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய விலகிக் கொண்டுள்ள நிலையிலேயே, இன்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் சந்திப்பு நடைபெறுகிறது.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் சில விடயங்களில் உடன்பாடு காண முடியாமல் இருப்பதால், அவற்றிற்கு உடன்பாடொன்றை காணும் முகமாக சர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜாதிக ஹெல உறுமய ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்திற்கு குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்த அதேநேரம், அந்த கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய கலந்து கொள்ளாதென அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
எனினும், எவர் வந்தாலும், வராவிட்டாலும் திட்டமிட்டவாறு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுமென அதன் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இதேவேளை, தீர்வுயோசனையின் தற்போதைய நிலைமைகள் குறித்து வினவிய போது, 90 சதவீதமான பணிகள் நிறைவு பெற்றிருப்பதாகவும் 10 சதவீத பணிகளே இன்னும் எஞ்சியிருப்பதாகவும் அமைச்சர் விதாரண சுட்டிக்காட்டினார்.
எனினும், தீர்வு யோசனையின் முழுமையான அறிக்கையை தயாரித்து முடிப்பதற்கு கால எல்லை ஒன்றை வரையறுத்துக் கூறுவது கடினமென தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கு ஏற்புடையதொரு தீர்வையே இந்த யோசனைமூலம் முன்வைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உரிய முறையில் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப் பகிர்விற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மட்டுமே போதாது என்ற நிலைப்பாட்டில் குழுவின் பிரதிநிதிகள் இருப்பதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், இனப் பிரச்சினை தீர்வு யோசனையின் 90 சதவீதப்பணிகள் நிறைவடைந்து விட்ட போதிலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி இன்னும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையென சர்வகட்சி பிரதிநிதிகள்குழுவின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துடன், மேலும் சில இணைப்புகளுடன் கூடியதாகவே தீர்வு யோசனையை சமர்ப்பிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறிருப்பினும், தீர்வு யோசனையில் “”ஒற்றையாட்சி’ என்ற பதம் இணைக்கப்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முதலில் அமுல் செய்யப்பட்டதன் பின்னர் அடுத்த கட்டம் பற்றி யோசிப்போம் என்ற நிலையிலேயே இந்தியா இருப்பதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன.