அன்றிருந்த நிலைமையும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல் வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்ல முடியுமென நான் நினைக்கின்றேன் என்று எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக ஒரு நபர் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர் எனது கொள்கைக்காக செயற்படுகின்றார் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புலிகளுடன் இருந்தவர்களும், அவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள் ஆயினும், இந்தப் பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன். எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இணக்கத்துடன் வரவேற்பேன் என்றும் அவர் சொன்னார்.
கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் சரத் பொன்சேக்கா மேற்கண்டவாறு தெவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய சரத் பொன்சேக்கா,
இதுவரை காலமும் நீங்கள் என்னிடம் தொடர்ச்சியாக எழுப்பிவந்த கேள்விக்குப் பதில், அனைவரும் எதிர்பார்த்த கேள்விக்கான பதில், இந்தத் தருணத்தில் நான் பதிலளிக்க விரும்புகிறேன். நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா? பதில் – ஆம். அரசியலுக்கு வருகிறேன். எதிர்க்கட்சிகளிலுள்ள அனைத்து பிரதான கட்சிகளின் வேண்டுகோளுக்கமைய நான் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குகிறேன்.
எனது நலனைக் கருத்திற்கொண்டு நான் இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை. எனது எதிர்காலம் குறித்தோ, சௌகரியங்கள் குறித்தோ எண்ணியல்ல நான் இந்தத் தீர்மானத்தை எடுத்தேன். 40 ஆண்டுகாலம் அரச சேவையில் பணியாற்றிய பின்னர், சீருடையொன்றை அணிந்திருந்து, அந்த சீருடையைக் கழற்றிவிட்டு, அதன்பின்னர் செல்வதற்கு முன்னர் இறுதிக் காலத்தில் எவ்வித கடமைகளும், பொறுப்புக்களும் இன்றி காலத்தை வீணடிப்பதில் பயனில்லை என்பதால் நாட்டிற்கு சேவை செய்வதிலும், நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதிலும், நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்துவதிலும் நான் ஈடுபாடு செலுத்த வேண்டும் என்பதற்காகவே நான் இந்தத் தீர்மானத்தை எடுத்தேன்.
நாடு அழிவுப் பாதையில் செல்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது போனது. நாட்டில் உள்ள பாகுபாடு, நடைபெற்றுவரும் ஊழல், வீண்விரையம், ஜனநாயகத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல், ஊடகச் சுதந்திரம் அற்றுப் போதல் ஆகியவற்றுக்கு எதிராகவும், அத்துடன் இளைஞர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல், சமாதானத்தைப் பேணுதல் ஆகியவற்றை முன்நிறுத்தியும் நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். நான்கு வருடகாலத்திற்கு குறைவான காலப்பகுதி நான் இராணுவத் தளபதியாக இருந்தேன். அந்தக் காலப்பகுதியில் நான் இரண்டு வாக்குறுதிகளை வழங்கினேன். அவ்விரண்டு வாக்குறுதிகளையும் நான் முழுமையாக நிறைவேற்றினேன். இதன்மூலம் நான் கூறவருவது, நான் வாக்குறுதி வழங்கினால் அதனை முழுமையாக நிறைவேற்றும் ஒரு நபராக என்னை அடையாளப்படுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இராணுவ அதிகாரிகளதும், இராணுவ சிப்பாய்களதும் அர்ப்பணிப்பு காரணமாகவே கடந்தகால யுத்த வெற்றி பெற்றப்பட்டது. அந்த வெற்றியின், கௌரவத்தின் பாரிய பங்களிப்பு பொதுமக்களுக்கு உரித்தானதாகும். பொதுமக்களின் ஒத்தழைப்பு எமக்கு கிடைக்காவிடின், அந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது போயிருக்கும். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நான் ஞாபகப்படுத்தும் ஓர் விடயம்தான், லட்சக்கணக்கானவர்கள் இராணுவத்தில் இணைந்துகொள்ளாதிருந்தால் எமக்கு இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. இந்த வெற்றியின் பெரும் பங்காளர்களாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தை வழிநடத்தி, வெற்றியை நோக்கி இராணுவத்திற்குப் பயணிக்க முடிந்ததையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். எனினும், இந்த வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கிய எந்தவொரு நபரிடமிருந்தும் அந்த வெற்றியைப் பறித்துக்கொள்வதற்கோ, அந்த வெற்றியின் மூலம் வீரனாவதற்கோ, மாமன்னராவதற்கோ நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். வெற்றியின் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு, அரசியல் தீர்மானங்களுக்கமைய நிச்சயமாக உரித்தாகும். எனினும், பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை மீட்டு நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற தேவையும், ஆர்வமும் நாட்டில் இருந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரேவிதமாக இருந்தது என்பதை நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த யுத்தம் ஒரு இனத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட ஒன்றல்ல. இந்த யுத்தம் வடக்கு அல்லது கிழக்கு மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமும் அல்ல. இந்த யுத்தம் பயங்கரவாதிகளுக்கெதிராகவே செய்யப்பட்டது. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாடு, இனம், சமயம் உள்ளிட்ட அனைத்து இன மக்களையும் மீட்டெடுப்பதற்காக இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அதனால், எந்தவொரு நபரும் பிழையான அர்த்தத்தை இந்த யுத்தத்திற்கு கொடுத்துவிடக்கூடாது. காரணம் இந்த யுத்தம் எந்தவொரு இனத்தையும், தமிழ் மக்களையும் துன்பப்படுத்துவதற்காக செய்யப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், பயங்கரவாதத்தை ஒழித்து, தமிழ் மக்களை அங்கிருந்த அவல, துன்பரமான நிலையிலிருந்து மீட்பதற்காகவே இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இந்த தமிழ் மக்களின் எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமாகவும், சமாதானமாகவும் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்கே இந்த வழிமுறை முன்னெடுக்கப்பட்டது. இதற்காகவே வடக்கு கிழக்கு பிரதேசம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது.
அதுமாத்திரமல்ல வடக்கு கிழக்கிலிருந்த சமய வழிபாட்டுத் தலங்கள் விசேடமாக மடு தேவாஸ்தானம் போன்ற தலங்களை நீண்டகாலத்திற்குப் பின்னர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டு பொதுமக்களின் வழிபாட்டிற்கு வழியமைத்துக் கொடுத்தோம். இதன்மூலம் நாம் ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் அடைகிறோம். இதனிடையே தீர்வை நோக்கி சமாதானத்தின் மையமாக வைத்து பயணித்து தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஐக்கியமும், அனைத்து இன மக்களும் புரிந்துணர்வுடன் சமாதானமாக வாழக்கூடிய சூழலில் எமது நாட்டைக் கட்டியெழுப்புவதே நாட்டின் தேவையாக உள்ளது.
தற்போதுள்ள அரசாங்கம், விடுவிக்கப்பட்ட மக்களை நடத்தியவிதம் குறித்து திருப்தியடைய முடியாது. நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் சுமார் மூன்று லட்சம் மக்களை மீட்டெடுத்தோம். எனினும், மீட்டெடுக்கப்பட்ட அந்த மக்களை மிகவும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளி, எந்த வசதிகளும் இன்றி, முகாம்களில் அடைத்து வைத்து, அவர்கள் வேதனையுடன் வாழும் நிலைக்கு தள்ளிவிட நாம் எதிர்பார்க்கவில்லை. விடுவிக்கப்பட்ட மக்களை நியாயமான முறையில் நடத்துவதற்கு இந்த அரசாங்கத்திற்கு முடியாது போனது. அந்த மக்களின் வசதிகள், அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை வழங்குவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. இராணுவத்தினரின் பிரயத்தனம் காரணமாகவே அந்த மக்கள் ஓரளவேனும் பராமரிக்கப்பட்டனர். எனவே, அந்த குறையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த மக்களின் தேவைகளைப் ப+ர்த்தி செய்வது குறித்து எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கி, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பாக மீண்டும் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அந்த மக்கள் வெறுமனே குடியமர்த்தப்படக் கூடாது. அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டே குடியமர்த்தப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் யுத்த வெற்றியின் பலாபலன்களை முழுமையாக பெற்றுக்கொள்ளவில்லை. யுத்தத்தை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தத்தின்பேரில் இந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் இலாபம் பெற்றுக்கொள்ள முயற்சித்தனர். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு யுத்தத்தை முன்னெடுத்தது நாட்டை மீட்டெடுப்பதற்காகவே அன்றி ஒரு குடும்பத்தினரின் நலனுக்காக அல்ல. எனினும் இறுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியின் மூலம் பலன்களைப் பெற்றுக்கொள்வதை ஒருபுறம் வைத்துவிட்டு, ஒரு குடும்பத்தின் எதிர்கால நலன்களுக்காக அரச தலைவர் செயற்பட்டதை இறுதியில் எம்மால் காண முடிந்தது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு செயற்படுவதன் மூலம் அவருக்கு அர்ப்பணிப்பு இன்மையும், நாட்டின் மீது பற்று இல்லாத தன்மையும், நாட்டு மக்கள் மீது அன்பு இன்மையும் உறுதியாகியுள்ளன. முப்படைகளை அர்ப்பணித்து இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியின் பலன்களைப் பெற்றுக்கொள்ளாது, அந்த வெற்றியின் மூலம் அரச தலைவரும், அவரது குடும்பத்தினரும் மாத்திரம் நன்மைகளைப் பெற முயற்சிப்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் துன்பியல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலேயே நான் எதிர்காலத்தில் நாட்டிற்கு சேவையாற்றுவதற்காகவும், இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் அரசியலுக்குள் பிரவேசிக்கத் தீர்மானித்தேன். இந்தக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் போது, எனக்குத் தெரியும், குப்பைகளை அகற்றுவோரின் மீதும் அழுக்குப்படும். மிகவும் கவலையுடனாவது அந்த நிலையை நான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைமேடொன்றை அரசாங்கம் சேர்த்துவைத்துள்ளது. அந்த குப்பை மேட்டை அகற்ற முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் எம்மீது அழுக்குப்படும். உங்களுக்குத் தெரியும் தற்போது முதலே என்மீது சேறுப+சுகின்றனர். பெயருக்குக் களம் ஏற்படுத்துகின்றனர். எனினும், கவலையுடனாவது இந்த நிலைமையை துணிவுடன் நான் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன். இந்த அரசாங்கம் ஒழுங்கற்ற விதத்தில் இராணுவ ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இலங்கையில் இதுவரை இராணுவத்திலிருந்து உருவாக்கி, மிகவும் உயர் பதவியை வகித்த அதிகாரியாக நான் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனவும் அவர் கூறினார்.