Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹிட்லரின் கடிதம் 5,75,000 ரூபாவுக்கு ஏலம்!

 அடால்ப் ஹிட்லர் எழுதிய கடிதம் ஒன்று, 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் ரெண்டல் என்பவர், அந்தக் கடிதத்தை ஏலம் எடுத்தார்.

பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இடையே உண்மையான நல்லுறவை விரும்புவதாக, அடால்ப் ஹிட்லர் எழுதிய கடிதமே இவ்வாறு ஏலம் விடப்பட்டது.

பிரிட்டன் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி குறித்து, கட்டுரை ஒன்றை எழுதுமாறு, அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் செப்லான் டெல்மர் என்பவர், ஹிட்லரிடம் கேட்டிருந்தார்.

அதற்கான தன் பதிலை, 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதியிட்ட ஒரு பக்க கடிதம் மூலம், ஜெர்மனியை ஆட்சி செய்த சர்வாதிகாரியான ஹிட்லர் அனுப்பி வைத்தார்.

தட்டச்சுப் பதிவிலான அந்தக் கடிதத்தில்,

“முதலாவது உலகப் போரின் வருத்தமான உணர்வுகளில் இருந்து விடுபட்டு, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இடையே உண்மையான நல்லுறவை உணர்ந்தால், நான் மிகவும் சந்தோஷமடைவேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கடிதத்தை ஏலம் விட்ட போது அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் ரெண்டல், அந்தக் கடிதத்தை 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் எடுத்தார்.

இவர், மசாசூசெட்ஸ் பகுதியில் அமைந்துள்ள இரண்டாம் உலகப் போர் அருங்காட்சியகத்தின் உரிமையாளர். இந்தக் கடிதத்தை வாங்கியது குறித்து அவர்,

“இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஏலம். வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் கடிதத்திற்கு 24 லட்சம் ரூபா வரை கொடுக்கத் தயாராக இருந்தேன்” என்றார்.

ஹிட்லர் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பிரிட்டன் நிருபர்களில்ஒருவர் டெல்மர். ஹிட்லரை நேரடியாகப் பேட்டி எடுத்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த முதல் நிருபரான இவர், 1932ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, ஹிட்லருடன் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

Exit mobile version