1000ம் ரூபா நாள் சம்பளத்தை வென்றெடுக்கும் காலம் இன்னும் கடந்து விடவில்லை:சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாத்தளை மாவட்ட ஏற்பாட்டாளர் செ.மோகன்ராஜ்.
சம்பளப்பிரச்சினையை முதலாளிமார் சம்மேளனத்திற்கு சார்பாக தேர்தலுக்கு முன்னோ தேர்தல் காலத்திலோ முடித்திருந்தால் மக்கள் வாக்குகளை கணிசமாக குறைத்திருப்பர்.
இந்நிலை மலையக பாராளுமன்ற அரசியல் அரங்கிலே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதனை நன்கு அறிந்து கொண்ட மலையக தொழிற்சங்க தலைமைகள் தேர்தல் நிறைவடைந்ததும் சம்பளத்தை பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியுடன் பிற்போக்கு ராஜ தந்திரத்தால் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது என பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் சார்பாக அதன் மாத்தளை மாவட்ட ஏற்பாட்டாளர் செபஸ்டியன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது எதிர்பார்த்ததைப்போலவே தொழிற்சங்கமும் புதிய அரசாங்கமும் தோட்டத்தொழிலாளர்களை கைவிட்டுள்ளது. தற்போது 770 ரூபாய் என்ற குழப்பகர சம்பளம் வழங்கப்பட போவதாக குறிப்பிடுகின்றனர்.
இதுவும் நாளொன்றுக்கான முழுமையான சம்பளம் அல்ல இத்தொகையை வைத்து வாழ்க்கைச்செலவை சமாளிக்க ஒரு போதும் முடியாது. கடந்த மார்ச் 31ல் இருந்து இழுத்தடிக்கப்பட்டு வரும் சம்பள முரண்பாட்டை புதிய அரசாங்கம் கண்டுக்கொள்ளாது தாங்களும் பழையவர்களை போலத்தான் என்று நிருபித்துள்ளது. முற்றுமுழுதாகவே முதலாளிமார் சம்மேளனத்தின் கைகளே ஓங்கியுள்ளது. முதலாளிமார் சார்பாகவே தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் நடந்து கொள்வதை தொழிலாளர் சக்திகள் உணர முன்வர வேண்டுமென்பதோடு பிற்போக்கு தொழிற்சங்கங்களை நிராகரித்து 1000ம் ரூபா நாள் சம்பளத்திற்காக தொழிலாளர்கள் போராட்டங்களை பலமாக பரந்து பட்டு முன்வரவேண்டுமென அறைகூவல் விடுக்கின்றோம். தொழிலாளர்கள் போராடினால் நிச்சயமாக 1000ம் ரூபா சம்பளத்தை வென்றெடுக்க முடியும் எனவும் போராடினால் எக்காலமும் தொழிலாளர்களுக்கு சார்பாகவே அமையுமென தமதமைப்பு நம்புவதாகவும் குறிப்பிட்டார்.