Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

05.01.2015 – பயங்கரவாதி ராஜபக்சவும் அஷிமாவின் வலியும்

Lasantha‘இலங்கையின் மனித உரிமை மற்றும் ஊடக வரலாற்றில் இரத்தம் படிந்த நாள் ஜனவரி 8ம் திகதி 2009. அதிகார மமதையிலிருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அத் தூதுவனைக் கொலைசெய்யத் தீர்மானித்த நாள். அவர்களது கொலைகாரர்களை நிராயுதபாணியான ஊடகவியளார் மீது தொலைந்துபோகச் செய்த நாள். அந்த நாள் எனது அப்பாவின் நீதிக்கும் சமத்துவத்திற்குமான பார்வை நிறுத்தப்பட்ட நாள். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குக் காரணமான கொலைகாரர்கள் தமது இரத்த வெறி செழித்து வளர்வதற்கு தம்மை மீண்டும் ஆட்சிசெய்யத் தெரிவு செய்யுமாறு நினைவுத்திறனற்ற மக்களை நோக்கிக் கேட்கிறார்கள், ‘

கொழும்புத் தெருக்களில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் ராஜபக்ச கொடுங்கோலர்கள் ஏவிய கொலைகாரர்களால் கொன்று போடப்பட லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஷீமா விக்கிரமதுங்க ஊடகங்களுக்கு எழுதிய கட்டுரை ஒன்றின் ஆரம்பம் இது.

2009ம் ஆம் ஆண்டு லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டு ஆறு வருடங்கள் உருண்ட்டோடிவிட்டன.

அஷீமா என்ற குழந்தை தனது தந்தைக்காகச் சிந்தும் கண்ணீரப் போன்று ஆயிரமாயிராமாய் குழந்தைகள் ஓலமிட்டார்கள். வன்னியில் நடத்தப்பட்ட மனிதகுலப் படுகொலை முதியவர்களையும், கர்ப்பிணிப் பெண்களையும், அன்னையர்களின் மடியில் பசியோடு அழுத குழந்தைகளையும், புத்திர சோகத்தில் அவலக் குரலெழுப்பிய தந்தையர்களையும் வேறுபாடின்றிக் கொன்றொழித்தது.

அக்கொலைகளின் நேரடியாகத் தலைமைதாங்கிய ராஜபக்ச குடும்பம் அதன் பரிவரங்களோடு ஊழிக் கூத்தாடிற்று. மகிந்த ராஜபக்ச என்ற கொலைகாரனுடன் இணைந்து மைத்திரபால சிரிசேன குமாளமடித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தது. ஜே.வி.பி பயங்கரவாதம் ஒழிந்துபோகிறது என்றது. ஜாதிக ஹெல உறுமைய பௌத்த சிங்களப் பேரினவாதத் தீயில் எஞ்சியவர்களை எரித்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக ராஜபக்ச என்ற பயங்கரவாதியின் ஆதாரமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் செயற்பட்டது. மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்டார்கள்.

லசந்தவின் மனைவி சொனாலி அமெரிக்க அரசின் தயவில் காப்பாற்றப்பட்டார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்களில் பலரை அமெரிக்கா உள்வாங்கிக் கொண்டது.

கொலைகாரர்கள் இரண்டகப் பிளவடைந்து மோதிக்கொள்கிறார்கள். ஒரு புறத்தில் பயங்கரவாதி ராஜபகசவும் குடும்பமும்; மறுபக்கத்தில் அப்பயங்கரவாதியின் முன்னை நாள் அடியாட்களும் ஆதரவாளர்களும்.
இரண்டு தரப்புமே தமக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள்.

கொலைகளை ஏவிய அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தயவில் வாழும் மற்றொரு மேட்டுக்குடிக் கும்பல் ஜனநாயகம் படைக்கிறோம் என்கிறது.

எங்கு திரும்பினாலும் கொலைகாரர்களின் நிழலை மிதித்தே மக்கள் கடந்துசெல்ல வேண்டிய பயங்கரமான சூழல் காணப்படுகிறது.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பதே அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்ற அடிப்படை கூட மக்கள் மத்தியிலிருந்து அகற்றப்பட்டு விதேசியர்கள் அனைத்தையும் கையகப்படுத்திக்கொண்டார்கள்.

தேசிய விடுலைப் போராட்டம் என்பது கூட ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையிலிருந்தே ஆரம்பமாகும் என்ற உண்மைய அழித்து ஏகாதிபத்திய சார்பு மேட்டுக்குடிகள் அதனைக் கையகப்படுத்திக்கொண்டார்கள். ராஜபக்சவின் அழிப்பு என்பதை வெறும் மனித உரிமைப் பிரச்சனையாகக் குறுக்கிக்கொண்ட மற்றொரு கூட்டம் தம்மை ஜனநாயகவாதிகள் என்கிறது. உயர்குடிகள் கோரும் இந்த ஜனநாயகம் என்பது ஒடுக்கப்படும் மக்கள் மீதான சர்வாதிகாரம். அதிகாரவர்க்கத்தின் மீதான சர்வாதிகாரம் என்பது ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயகம்.
மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையேயான முரண்பாடென்பது ஆளும் வர்க்கங்களிடையேயான தற்காலிக உள்முரண்பாடே..

இந்த இரண்டு பேரினவாதிகளிடமிருந்தும் தம்மைப் தற்காத்துக்கொள்ள மக்கள் இணைந்துகொள்ள வேண்டும். அதற்கான உறுதிமிக்க புடம்போடப்பட்ட அரசியல் முன்வைக்கப்பட வேண்டும். அது நிராகரிக்கப்படும் ஒவ்வொரு கணமும், அஷீமாவின் வலியை இன்னொடு சந்ததியும் அனுபவிக்கும்.

Exit mobile version