மேற்கின் இஸ்லாமியர்களுக்கு எதிரான யுத்தம் என்பது இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அமரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட வேளையில் அந்த யுத்தம் உச்ச நிலையை அடைந்திருந்தது. அமரிக்காவில், இஸ்பைனில், பிரித்தானியாவில், இந்தோனேசியாவில், இந்தியாவில், பாகிஸ்தானில், பிரான்சில் என்று உலகின் ஒவ்வொரு சந்திகளிலும் இஸ்லாமியர்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள்.
சாமுவேல் ஹன்டிங்கட்னின் நாகரீங்களின் மோதுகை என்ற கோட்பாடு அமரிக்க அதிகாரவர்க்கத்தின் துணையோடுதான் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் நிறுவிக்கொண்டிருந்தன.
மதம் சார்ந்த பண்பாடுகளின் வழியே சர்வதேசப் பொதுமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரே சமூகமாக அவர்கள் கருதப்ப்பட்டனர். அமரிக்க அணி சோவியதின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது எதிரியை தானே திட்ட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டது. இஸ்லாமியர்கள் எதிரிகளாக்கப்பட்டனர். உருவமைக்கப்பட எதிரியைக் காரணமாக முன்வைத்து தனது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரித்துக்கொள்ளவும், நாடுகளை ஆக்கிரமிக்கவும் தார்மீக நியாயத்தைத் தேடிக்கொண்டடன மேற்கு நாடுகள்.
அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்த ஒவ்வொரு இஸ்லாமியரும் பயங்கரவாதியாகவும் அடிப்படை வாதியாகவும் சித்தரிக்கப்பட்டான். அடிப்படை வாதிகளின் தவறுகளைத் தனக்கு வாய்ப்பாக்கிக் கொண்ட அமரிக்க அணி, மொத்த இஸ்லாமியச் சமூகத்தையும் அடிப்படை வாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் உருவகப்படுத்தி அவர்கள் மீதான யுத்ததைக் கட்டவிழ்த்துவிட்டது. ஆக, மேற்கு நாடுகள் எதிரிகளை உருவாக்கிக் கொண்டார்கள், எதிரிகளைப் பலமடையாமல் அழிப்பதற்கு அவர்களுக்கு ஒரு குறித்த அடையாளத்தை அதாவது அடிப்படை வாதிகள் என்ற அடையாளத்தை வழங்கித் தனிமைப்படுத்தி அழிக்க முற்பட்டனர். இறுதியில் இஸ்லாமிய சமூகத்தின் நியாயமான ஒவ்வொரு எதிர்ப்புக் குரல்களும் அடிப்படை வாதிகள் என்ற போர்வையில் நசுக்கப்பட்டன.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் பெரும் பகுதியினர் தாம் ஒடுக்கப்பட்ட மக்கள் என உணர ஆரம்பித்துள்ளனர். இவர்களின் மத்தியிலிருந்து இலங்கை – இந்திய அரசுகளின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகள் பல்வேறு தளங்களில் செயல்வடிவம் பெற ஆரம்பித்துள்ளன. இவர்களெல்லாம் இந்தியாவும், அமரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஏன் ஐக்கிய நாடுகளும் கூட இறுதிவரை நம்பவைத்து ஏமாற்றியதை கண்முன்னே பார்த்தவர்கள்.
தமிழகத்தில் சமூகபற்று மிக்க மனிதர்களெல்லாம் தமது மறு எல்லையில் சாரி சாரியாக மக்கள் கொலைசெய்யப்படுவதற்கு தாம் சார்ந்த அரசுகளே காரணம் என அறிவிக்கப்பட்டவர்கள். அரச அதிகாரங்கள், வாக்குக் கட்சி அரசியல்வாதிகள், சாமியார்கள், மதகுருக்கள் என்று சமூகத்தை ஆதிக்கம் செலுத்துகின்ற ஒவோரு கூறுகளும் எமாற்றியதை கண்டுகொண்டவர்கள். இதனால், தாம் ஒடுக்கப்பட்டவர்கள் என உணர்ந்துகொண்டவர்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் வியாபாரிகள், உளவாளிகள், லும்பன்கள் போன்ற பிரிவினர் தவிர்ந்த அனைவருமே தம் மீதான ஒடுக்குமுறையைக் கண்கூடாகக் கண்டவர்கள். ஆக, இவர்களிடையேயான இணைவு தெற்காசியாவின் புதிய சக்தியாக உருவெடுக்கும் என அச்சம் கொள்கிறார்கள் அதிகாரவர்க்கத்தினர். ஒடுக்குமுறையை உணர்ந்து கொண்டு அதனை எதிர்கொள்வது குறித்துச் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் தமழ்ப் பேசும் மக்களைப் பிளவு படுத்துவதும் அவர்களுக்குப் பயங்கரவாத அடையாளத்தை வழங்குவதும் இன்று இலங்கை இந்திய அரச உளவாளிகளும் அவற்றின் முகவர்களும் பிரச்சார ஊடகங்களும் மேற்கொள்ளும் நடவடிக்கையாக அமைகிறது.
இலங்கை அரசிற்கு எதிரானவர்களெல்லாம் புலிகள் என்ற சமன்பாட்டை அவர்கள் உருவாக்க முனைகிறார்கள். அதன் வழியாக புலிகளின் தவறுகளையெல்லாம் அரசை எதிர்க்கும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் மீது சுமத்த முனைகிறார்கள். இலங்கை அரசின் வெளிப்படையாகத் தெரியும் அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படும் போதும், போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போதும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி புலிகள் என்ற முத்திரையைப் பதித்து அன்னியப்படுத்த முயல்கிறார்கள். இந்த முயற்சியை ஆரம்பிப்பது அரசும் அதன் ஊதுகுழல்களும்; பின் தொடர்வது லும்பன்களும் அரசியல் வியாபாரிகளும் என்ற ஒழுங்கு முறையைக் கூட இங்கு காணலாம். இதனூடாக அரச வலைப்பினா சாதிக்க விரும்புகின்ற இரண்டாவது பிரதான விடயம் என்பது பிளவுகளை உருவாக்குதலாகும்.
குறிப்பாகத் தமிழ் நாட்டில் வாழும் ஒடுக்குமுறையை உணர்ந்துகொண்ட போராட்ட சக்திகளை புலிகளின் மையப் பகுதியாக அடையாளப்படுத்தி அவர்களை குழப்பவாதிகளாக சித்தரிக்க முனைவது என்பது இலங்கை – இந்திய அரசுகளின் தந்திரோபயமாக அமைகிறது. இவ்வாறான ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வுகளின் அடிப்படையிலான இணைவைச் சீர்குலைப்பதற்காக அவதூறுகளை உருவாக்குதல், அவற்றைப் பரப்புதல், அழிவுகளின் ஊற்றுமூலம் இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் என பரப்புரை செய்தல், அழிவை ஏற்படுத்திய புலிகளின் தொடர்ச்சி என தனிமைப்படுத்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளை நாம் கண்டுகொள்ளலாம். அண்மையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், முற்போக்கு அமைபுக்கள், தனி நபர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்புலத்தில் இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிடலை உய்த்தறிவது கடினமான ஒன்றல்ல.
எது எவ்வாறாயினும் இவற்றை எதிர்கொள்ளும் வலிமையும் கோட்பாடும் மிக அவதானமாக உருவாக்கப்பட வேண்டும்.
அருமையான கட்டுரை..
தமிழகம் மட்டுமல்ல.. அதற்கப்பால் உள்ள உலகத் தமிழர்கள் அனைவரினதும் தார்மீக ஆதரவு எமக்குத் தேவை. அவ்வாறான பட்சத்தில் மாத்திரமே எம் இரத்த உறவுகளாய் இலங்ககையில் வாழும் மக்கள் நியாயமான உரிமைகளுடன் நிம்மதியாய் வாழ்வதற்கான வழி பிறக்கும்.
அதற்கான பயணத்தில் நம்மிடையே கருத்து மோதல்கள் வரலாம். அதனை நாகரீகமாக எதிர்கொள்ள வேண்டும். தனி மனித தாக்குதல்கள் ஊடக தர்மம் அல்ல. சிலவேளைகளில் நானும் தவறு செய்திருக்கலாம். அவற்றை இனியாவது திருத்திக் கொள்வோம்.
உண்மைதான்.அனைத்தும் தத்துவார்த்தமான கருத்துக்கள்.நரிகள் இடையே மான் கள் போல உச்சி ஓட வேண்டிய நிலையில் தமிழர், நமக்குள்ளே இருந்து நமக்கு குழி பறீக்கும் நம்மவர் இந்த நிலையில் அரசுக்கு விசுவாசமான நாய்கள் யார்? நம்மையே அழிக்க நினைக்கும் பேய்கள் யார் எனத் தெரியாத நிலையில் நமது மரதன் ஓட்டம்.
இதை யாரெழுதியதோ நானறியேன். ஆனால் ஏன் எழுதப்பட்டதென்று ஊகிக்க முடிகிறது.
சொற்களுக்கும், அவற்றால் சுட்டப்படும் விடயத்துக்க்கும் இடையில் உள்ள இடைவெளிகளைப்பயன்படுத்தி இக்கட்டுரை தனதரசியலைச் செய்கிறது.
அது ஒருபுறம் இருக்கடுட்ம்.
இசுலாமியப் போராளிகள் அடிப்படைவாதிகள் என முத்திரைகுத்தப்படுவதையும் தமிழ்நாட்டிலுள்ள “தமிழர் போராளிகள்” புலிகள் என முத்திரை குத்தப்படுவதையும் இக்கட்டுரை ஒப்பிடுகிறது.
நல்ல ஒப்பீடே.
முசுலிம் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்களும் இயக்கங்களும் தமது சரியான எதிரியை இனங்காணத்தவறுவதும், பொருத்தமான போர்முறைய கண்டுபிடிக்கத்தவறுவதும், சரியான நட்புச்சக்திகளைத் தவிர்த்தோட முனைவதும் ஏன் நிகழ்கிறது?
அது மதச்சார்பால்தான் நிகழ்கிறது.
முசுலிம் போராளிக்குழுக்கள் பலவற்றில் தொற்றிக்கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதமே அவற்றைத் தடம்புரள வைக்கிறது. எதிரிக்கும் அதுவே சாதகமாகிப் போய்விடுகிறது.
புலிகள் என்ற அமைப்பு இலங்கையில் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்டபிறகு “புலிகள்” என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
அது “புலியிசம்” என்பதாகும். அதாவது புலிகளின் அரசியலின் தொடர்ச்சி. மிச்சம்.
முசுலிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதாக வெளிக்கிட்ட அமைப்புக்கள் எப்படி இசுலாமிய அடிப்படைவாதத்தால் தமது எதிரிக்கே சாதகமாக மாற்றப்படுகின்றனவோ அதே போன்றுதான் தமிழர் விடுதலைக்குப் போராடுவதாக வெளிக்கிடும் அமைப்புக்கள் இந்த “புலியிச” சிந்தனை முறையால் தமிழருக்கே பாதகமானவையாக மாறுகின்றன.
தமிழகத்தின் “போராளிகள்” புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த அட்டூழியங்களைப் பேச மறுத்தும், பேச வேண்டாம் எனத்தடுத்தும் கொண்டிருந்தால், அவர்களை எப்படி தமிழ் மக்களுக்குச் சார்பான போராளிகள் என்று சொல்ல முடியும்?
அவர்கள் மறுபடியும் புலிகளின் அரசியலையே முன்னெடுத்துச்செல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் மறுபடியும் அடிப்படைவாதத்தையே துணைகொள்கிறார்கள்.
“புலிகள்” என்ற முத்திரை குத்தலை தூக்கிப்பிடித்து அதைச்சாடும் இந்தக்கட்டுரை, “அரச அடிவருடிகள்”, “அரச ஊதுகுழல்கள்”, “டக்ளசின் ஆட்கள்” என்ற முத்திரை குத்தல்களை வசதியாக மறைத்துவிடுகிறது.
ஆனால் இவ்வகையான முத்திரைகுத்தல்கள் துரோகி-தியாகி அரசியலின் அடிப்படையில் “புலியிச”த்தால் செய்யப்படுவதே. புலியிசத்தின் நீட்சியே.
புலிகளின் போர்க்குற்றம் பற்றிக் கதைத்தால், “நீ டக்ளசின் கைக்கூலி” என்று கார்ட்டூன் வரைந்து எதிர்கொள்வதும் இந்த வகையினதே.