அண்மைக்காலங்களில் இலங்கை அரச எதிர்ப்புப் புலம் பெயர் இணையங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியிடிருந்தன. இந்த நிலையில் இலங்கை அரசும் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இணைய தள யுத்த அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான சக்திகளும், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களும் கூட்டாக இணைந்து இந்த யுத்தத்தை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் யுத்தம் தொடர்பில் நடைபெற்ற விசேட கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முழு உலகமுமே கிராமம் என்ற அடிப்படையில் இணையத்தின் சேவை மேலோங்கி வரும் சந்தர்ப்பத்தில் அனைத்து நாடுகளுமேன இணையத்தின் ஊடான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய தளத்தின் ஊடாக தாக்குதல் நடத்தப்பட்டால் அது இராணுவ வீரர்களையும் அரச தலைவர்களையும் மட்டும் இலக்கு வைத்து நடத்தப்பட மாட்டாது எனவும், அது முழு நாட்டு மக்களையும் இலக்கு வைத்து நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.