Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“சட்டத்திற்கு முன்னால் யாவரும் சமமாக காட்டப்படுவார்கள்.” : ரதன்

Last Stop 174, Visitor ஆகிய படங்களை முன்வைத்து
There’s a Brazilian quote, “equals are treated equally in front of the law,” . கடந்த வாரங்களில் நடைபெற்ற ஒரு சம்பவம் “சட்டத்திற்கு முன்னால் மட்டும் சமமாக நடாத்தப்படுவார்கள்” என மேற்கூறிய கூற்றை வாசிக்க வைக்கின்றது. ஒன்று சோமாலியவில் பிறந்த கனடிய பெண்மணி நைரோபியில் விமானம் ஏற முற்பட்ட laststopபொழுது போலிப் படத்தைக் கொண்ட கடவுச் சீட்டு எனக் கூறி சுமார் மூன்று மாதங்கள் அந்தரத்திலும் இதில் ஒரு கிழமை சிறையிலும் கழித்த சம்பவம். நிற வெறி பிடித்த கனடிய பழமைவாதக் கட்சி அரசு இறுதி வரை உதவவில்லை. தொடர் முயற்சிகளின் பின்னர் டி.என்.எ சோதனையில் கனடாவில் வசிக்கும் அவரது மகனது இரத்தத்தை தாயின் இரத்தத்துடன் ஒப்பிட்டு மகனது தாய் இவர் தான் என்பதை நிறமூர்த்தங்கள் நிரூபித்தத்தையடுத்தே கனடா வர அனுமதிக்கப்பட்டார்.

Visitor:

கனரிக்கட் (Connecticut) மாகாணத்தில் பேராசிரியராக வேலை பார்க்கும் வோல்ரர் மனைவியை இழந்தவர். இருபது வருடங்களாக ஒரே பாடத்தையே படிப்பிக்கும் இவருக்கு இந்த வேலையும் போரடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு மாநாட்டிற்காக நியுயோர்க் நகரத்திற்கு வருகின்றார். அங்கு இவருக்கு ஒரு தொடர் மாடிக் கட்டிடத்தில் வீடு ஒன்று உண்டு. அங்கு வரும் அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருக்கின்றது. அவரது வீட்டில் ஒரு சிரிய-பாலஸ்தீனிய இளைஞன் ரெரிரிக்கும், அவனது கறுப்பின செனகல் நாட்டு முஸ்லீம் பெண் சிநேகிதியும் வசித்து வருகின்றனர். அது தனது வீடென்றும் அவர்களை வெளியே போகுமாறும் கூறுகின்றார். இது பற்றி நகர் காவலர்களுக்கு இவர் அறிவிக்கவில்லை. அவர்கள் அன்றிரவு தங்க இடமில்லை எனத் தெரிந்து அவர்களுக்கு மீண்டும் அங்கே தங்க அனுமதிக்கின்றார். படிப்படியாக இவர்கள் இருவருக்கும் இடையே ஓர் பிணைப்பு ஏற்படுகின்றது. ரெரிக் ஓர் Drumer. பேராசிரியரும் ரெரிக்கிடம் ஆபிரிக்க மேளம் அடிக்க கற்றுக் கொள்கின்றார். ஒரு நாள் இவர்கள் இருவரும் சுரங்க புகையிரத நிலையத்தினுள் சென்ற பொழுது ரெரிக் நகர் காவலர்களால் கைது செய்யப்படுகின்றார். பின்னர் இவர் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் வந்துள்ளார் எனக் கூறி தடுத்து வைக்கப்படுகின்றார். பேராசிரியர் ரெரிக்கை தொடர்ச்சியாக தடுப்பு முகாமில் சந்தித்து வருகின்றார். ரெரிக்கு ஓர் சிறந்த சட்டத்தரணியையும் ஏற்பாடு செய்கின்றார். ரெரிக்கின் தாய் மூனா மிச்சிக்கன் மாநிலத்தில் வசித்து வருகின்றார். ரெரிக் தொலைபேசியில் தன்னுடன் சில நாட்கள் கதைக்கவில்லை என்பதால், இவர் நியு யோர்க் நகரத்திற்கு வருகின்றார். அங்கு பேராசிரியர் உண்மையை கூறுகின்றார். தொடர்ந்து பேராசிரியர் ரெரிக்கை வெளியே எடுக்க முயற்சிக்கின்றார். ரெரிக்கின் தாய் மூனாவுக்கும் பேராரிசிரியருக்குமான நட்பு மேலும் மெருகேருகின்றது. மூனா விரும்பும் இசை நிகழ்ச்சிக்கு போராசிரியர் மூனாவை அழைத்துச் செல்கின்றார். ரெரிக்கை திடீரென ஒரு நாள் நாடு கடத்தி விடுகின்றனர். மூனா ரெரிக் நாடு கடத்தப்பட்ட சிரியாவிற்கு தானும் செல்கின்றார்.

போரசிரியராக ரிச்சட் ஜென்க்கிஸ் ((Richard Jenkins) சிறப்பாக இயல்பாக நடித்துள்ளார். மூனாவாக இஸ்Nரிலிய நடிகை Hiam Abbass நடித்துள்ளார். இயக்கம் Tom McCarthy; இறுதி வரை மிகவும் இறுக்கத்துடன் இயல்பாக படத்தை நகர்த்தியுள்ளார். சிக்கல் எதுவுமின்றி நேர் கோட்டில் நகரும் கதை.

Cry Freedom தொடங்கி விசிட்டர் வரை பல படங்கள் வெள்ளை மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. மீண்டும் முதலாவது சம்பவத்திற்கு வருவோம். சோமாலிய பெண்மணிக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தார்கள்? அவரது சமூகம் தான் போராடியது. இறுதி வரை தனது தூய்மையை நிரூபிக்க கை ரேகையில் இருந்து டி.என்.எ சோதனை வரை அவர் போராடினார். ஊடகங்கள் செய்திகளை மட்டும் செய்திகளாக வெளியிட்டன. ஒன்ராரியோ முதல்வர் கூட டி.என்.ஏ சோதனை முடிவின் பின்னர் தான் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இப் படத்திலும் வெள்ளை நிற பேராசிரியரே இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றார். எந்த குற்றமுமற்ற பலர் முஸ்லீம் என்ற காரணத்துக்காக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகின்றர் என்ற செய்தி அமெரிக்கர்களை சென்றடைய வெள்ளை நிற நடிகர் காரணமாக இருக்கலாம் என்று நினைப்பதே தவறாகும்.

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அடிமையாக வாழ்ந்து தங்களது போராடட்த்தால் இன்று நிமிர்ந்து நிற்கின்றார்கள். இன்று அங்கு நிற வெறி இல்லை என்று கூறமுடியாது. நியு இங்கிலாந்து என அழைக்கப்படும் பொஸ்ரன் நகரை அண்டிய மாநிலங்களின் கடற்கரைகளில் இன்றும் கூட 99 வீதம் வெள்ளை நிறத்தவர்களையே காணக் கூடியதாகவுள்ளது. இப்பொழுதும் கறுப்பின மக்கள் நிற பேதத்தால் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இப் படத்தின் இறுதியில் மூனா பேராசிரியரின் அறைக்கே செல்கின்றார் தனது துயரங்களை தேற்ற. கட்டிலில் பேராசிரியருடன் படுத்துக் கொள்கின்றார். இது ஆணைத் தேடி பெண் செல்கின்றார் என்ற ஒரு விமர்சனப் பார்வையுடன், வெள்ளை இனத்தை தேடி ஓர் முஸ்லீம் செல்வதாக கூட பார்க்கலாம்.

இவ் விரு பார்வைகளும் கடுமையான விமர்சனத்துக் குரியவை. இப் படத்தின் சிறப்பெல்லாம் இந்த மேலாதிக்க பார்வையால் அடிபட்டு போகின்றது. நியுயோர்க் நகரத்தில் மத்திய கிழக்கு முஸ்லீம்களை விட மெக்சிக்கோ, கியூபா போன்ற நாடுகளில் இருந்து வரும் ஸ்பானிய வெள்ளை நிறத்தவர்களே அதிகம். கதையில் முஸ்லீம் பாத்திரத் தேர்வு இன்றைய அரசியல் சாயலையும், அதனால் ஏற்படும் வணிக லாபங்களையுமே குறிவைத்துள்ளது.

Last Stop 174:

பிரேசிலின் றியோ நகரம், உலகில் வன்முறைக்கு பிரசித்தி பெற்ற நகரம். இந்த நகரில் போதை மருந்துக்கு அடிமையான மரிசியாவிடம் இருந்து மரிசியாவின் குழந்தையை மரிசியா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருக்கும் பொழுது துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று விடுகின்றனர். பத்து வருடங்களின் பின்னர் மற்றொரு சிறுவனின் தாய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். இவ் விரு சிறுவர்களும் இப்பொழுது வீதியில். மரிசியா இப்பொழுது திருந்தி கோயில் குளம் என தூய கிறிஸ்தவராக மாறிவிடுகின்றார். தன்னிடம் பறிக்கப்பட்ட குழந்தையையும் தேடுகின்றார். இதற்கிடையில் இவருக்கு தேவாலயத்தைச் சேர்ந்தவருடன் திருமணம் நடக்கின்றது. தனது மகன் அலெசாண்டிரியோவை சிறையில் முதன் முதலாக சந்திக்கின்றார் மரிசியா. மகனை திருத்த முற்படுகின்றார் மரிசியா. இதனால் சற்று கடுமையாகவும் நடக்கின்றார். மரிசியாவின் மகன் அலெசன்ரோவிற்கு ஓர் பாலியல் தொழிலாளியுடன் உறவு ஏற்படுகின்றது. சிறையில் இருந்து தப்பி ஓடும் அலெசாண்ரியோவும் அவனது சகா சன்ரியோவும் கொள்ளையடித்து காலத்தை கடத்துகின்றனர். சந்தியில் சமிக்ஞைக்காக வாகனங்கள் நிறுத்தப்படும் பொழுது துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பதே இவர்கள் வேலை. இதில் சன்ரியோ தலைவன். ஒரு சம்பவத்தில் அலெசாண்ரியோ துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவில்லை என்ற காரணத்தால் சன்ரியோ, அலெசாண்ரியோவை தன்னிடமிருந்து வெளியேற்றுகின்றான். தனித்து வரும் அலெசாண்ரியோ தாயைத் தேடிச் செல்கின்றான். தாயும் மறுத்து விட வீதிக்கு வரும் பொழுது பொலிஸைக் கண்டு பேரூந்தில் ஏறுகின்றான். இவன் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்ட ஒருவர் பேரூந்தில் இருந்து இறங்கி வீதியில் சென்று கொண்டிருந்த நகர் காவலர் வாகனத்தை மறித்து கூறுகின்றார். நகர் காவலர் பேரூந்தை சுற்றி வளைக்கின்றனர். பேரூந்தினுள் துப்பாக்கி முனையில் பயணிப்போரை பயணக்கைதிகளாக மாற்றுகின்றான் அலெசன்ரியோ.

கடத்தல் நாடகம் தொடர்கின்றது. பலரை அவர்களது அவசரம் கருதி விட்டு விடுகின்றான ஊடகங்கள் அனைத்தும் சம்பவ இடத்திற்கு வந்து விட்டன. தொலைக் காட்சிகள் உடனுக்குடன் காட்டுகின்றன. அவனது தாயும், அவனுக்கு உதவி செய்யும் ஓர் சமூக சேவகியும் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். இறுதியில் ஒரு பயணக்கைதியுடன் வெளியே வரும் பொழுது நகர் காவலர்கள் பிடித்து விடுகின்றனர். நகர் காவலரின் பிடியில் அவன் இறந்துவிடுகின்றான். அவனது சகா சன்ரியோவும், அவனது தாயும், அவன் நேசிக்கும் பாலியல் தொழிலாளி நண்பியும் கண்ணீர் வடிக்கின்றனர். இவர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்களே. அன்புக்காக ஏங்கும் சிறுவர்களுக்கு கிடைக்கும் பரிசு போதை மருந்து, கொலை, கொள்ளை.

Bruno Barreto இப் படத்தின் இயக்குனர். சிற்றி ஒப் கொட் என்ற படத்தின் திரைக் கதை ஆசிரியரே இப் படத்தின் கதாசிரியர்;. இயக்குனர் சுமார் ஆறு மாதங்கள் நடிகர்களுக்கு பயிற்சி அளித்த பின்னரே படத்தை எடுத்துள்ளார். றியோ வீதியில் உள்ள சிறுவர்களில் அதிகமானோர் கறுப்பினத்தவர்களே. இவர்களுக்கு எதிராகவே அரச இயந்திரங்கள் இயங்குகின்றன. இது பிரேசிலில் மாத்திரமல்ல அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து என பல நாடுகளில் இது நடைமுறையில் உள்ளன.

2007ல் ரிச்சாடோ என்ற 11 வயது சிறுவன் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளான். இதே ஆண்டு வீதியோரமாக நின்ற காரில் ஏழு சிறுவர்களின் உடல்கள் காணப்பட்டன. அனைத்தும் கறுப்பின சிறுவர்கள். கோஸ’டி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்தாக நகர் காவலர்கள் கருதுகின்றனர். ஏன் இந்த மோதல்? போதை மருந்து போட்டி. பெரும்பாலும் 15-25 வயதுக்குட்பட்டவர்களே கொலை, கொள்ளைகளை செய்கின்றனர். போதை மருந்து வியாபாரிகளின் கைக் கூலிகளாக இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கோஸ்டி மோதலில் பல சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 12 வயதிலிருந்து போதை மருந்துக்கு சிறுவர்கள் அடிமையாக்கப்படுகின்றனர். இச் சிறுவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றனர். சிறை உடைப்பு, மீண்டும் வன்முறை என இவர்கள் வாழ்வு தொடர்கின்றது. இதில் உள்ள சிக்கல் இந்தச் சிறுவர்களில் பெரும்பாலோனோர் கறுப்பினத்தவர். பிரேசிலில் வறுமையில் வாடுபவர்களில் 90 வீதமானோர் கறுப்பினத்தவரே. இதனால் அரசு இவர்களுக்கான மறு வாழ்வுத்திட்டங்களில் அக்கறை காட்டுவதில்லை. போதை மருந்து வியாபாரிகள் மறு வாழ்வுத் திட்டத்தால் லாபம் அடைவதில்லை. அரசு இவர்களின் கைக் கூலியாகவே உள்ளது.

படத்தில் வரும் இரு சிறுவர்கள் மீதும் ஒரு அனுதாபம் ஏற்படுகின்றது. அவர்களின் பிண்ணனியை ஆராய தூண்டுகின்றது. இது நல்ல இயக்கத்தலும். சிறந்த தொழில்நுட்பத்தாலுமே அது சாத்தியம்.
Cristina Rauter, Tania Kolker ஆகிய இரு பிரேசிலிய ஆய்வாளர்களின் கருத்துப்படி பிரேசிலில் முறையான மறு வாழ்வுத்திட்டங்கள் இல்லை. சிறுவர்கள் கூட வழமையான சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். றியோவில் சிறையில் உள்ளவர்களில் 66 வீதமானோர் கறுப்பினத்தவர்கள்.

உலகின் முதல் பத்து மொத்த உள்ளுர் உற்பத்தி (Gross Internal Product நாடுகளில் பிரேசிலும் ஒன்று. ஆனால் செல்வத்தை சரியான முறையில் விநியோகிக்கும் மிக மோசமான நாடுகளில் பிரேசில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட “Zero Tolerance” ன் பிராகாரம் பிரேசிலும் தனது சிறைகளை அதிகப்படுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் நகர் காவலர் பிரிவிற்கே அதிக பணம் ஒதுக்கப்படுகின்றது. (அமெரிக்காவின் மொத்த சனத் தொகையின் ஒரு சத வீதம் சிறையில் உள்ளார்கள்.(1) அமெரிக்க கறுப்பின மக்களில் ஆறு வீதமானோர் சிறையில் உள்ளனர். தென் ஆபிரிக்காவில் வெள்ளை இன அரசு இருந்த காலங்களில் கறுப்பின மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதை விட அதிகளவு கறுப்பின மக்கள் புஸ்ஸின் அரசில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்). São Paulo நகரில் 1995-2006க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு நாளைக்கு தலா 2 பேர் நகர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.(2) இதனை அந்நகர அரசே உறுதிப்படுத்தியுள்ளது.
இப் படத்தில் காட்டப்பட்டவை நிஜமானவை. சர்வ சாதாரணமாக பிரேசிலில் நடைபெறுகின்றன. “சட்டத்திற்கு முன்னால் யாவரும் சமமாக காட்டப்படுவார்கள்” இதைத்தான் அரசு சொல்லிக் கொண்டு செய்யும். சட்டம் சிறையிலடைக்கும். இவர்களுக்கான மறு வாழவுத்திட்டமும், இவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றும் பொறுப்பும் அந்த சமூகத்துக்கேயுரியதாகிவிட்டது. இது கறுப்பின மக்களுக்கு மாத்திரமல்ல மேற்கு நாடுகளில் வாழும் அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் இதுவே விதி.

Exit mobile version