“இனப்படுகொலை” என்று கூறும் அமெரிக்கத் தீர்மானம் குறித்து துருக்கி ஆத்திரம்!
இனியொரு...
முதலாம் உலகயுத்தத்தின் போது துருக்கியில் அர்மேனியர்கள் கொல்லப்பட்டதை “இனப்படுகொலை” என்று கூறும் அமெரிக்கத் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது குறித்து துருக்கி ஆத்திரம் அடைந்துள்ளது.
துருக்கி செய்யாத குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படுவதாக துருக்கி பிரதமர் ரிசெப் தயிப் எர் டோகன் கூறினார். அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுத் துறைக்குழுவில் ஒற்றை வாக்கில் வென்ற தீர்மானம் துருக்கி – அமெரிக்க உறவுகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்காவில் உள்ள தனது தூதரை துருக்கி திரும்ப அழைத்து ஆலோசனை நடத்தியது. மற்ற எதிர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் துருக்கி கூறியது. இப்பிரச்சனையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று துருக்கி கடுமையாகப் போராடியது. இதற்கென்று துருக்கி நாடாளுமன்றக் குழுவொன்று வாஷிங்டன் சென்றது. அமெரிக்க ஜனாதிபதி மாளிகையும் வாக் கெடுப்பு நடத்த வேண்டாம் என்று கூறியது.
இனப்படுகொலை என்ற புரிதல் அமெரிக்க கொள்கைகளில் பிரதிபலிப்பதை ஒபாமா உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவருடைய ஆண்டறிக்கையில் முதலாம் உலக யுத்தக் கொலைகளை அவ்வாறு குறிப்பிட வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்துகிறது. அமெரிக்க காங்கிரஸ் வெளியுறவு குழுவில் இத்தீர்மானம் 23-22 என நிறை வேறியது.
2007ம் ஆண்டில் காங்கிரஸ் குழுவில் நிறைவேறிய இதேபோன்ற ஒரு தீர்மானம், பின்னர் புஷ் தலையீட்டால் காங்கிரசுக்கு வரவில்லை. அதேபோல் இப்போ தும் நடக்கும் என்று துருக்கி எதிர்பார்க்கிறது. படுகொலைகள் நடந்ததை துருக்கி ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவை போருடன் நடந்த நிகழ்வுகள் என்றும், அர்மேனிய கிறிஸ்தவர் களை திட்டமிட்டுக் கொல்லவில்லை என்றும் துருக்கி கூறிவருகிறது.
1915ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான அர்மேனியர்கள் கொல்லப்பட்டனர். ஓட்டோமன் பேரரசு கிழக்கு அனடோலியாவை விட்டு கிறிஸ்தவ அர்மேனியர்களை வெளியேற்றியது. வெளியேறியவர்களை துருப்புகள் கொன்று குவித்தன. பலர் பசியாலும் நோவாலும் மடிந்தனர். இக் கொலைகளை இனப்படு கொலை என்று சர்வதேச சமுதாயம் கூற வேண்டு மென்று அர்மேனியா பிரச்சாரம் செய்து வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் அவ்வாறு அறிவித் துள்ளன.