“தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா உடன் தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.ம.தி.மு.க. சார்பில் நேற்று ராமேஸ்வரத்தில், சிறிலங்கா கடற்படையினரை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலர் வைகோ தலைமை தாங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்னியநாட்டு ராணுவத்தால் பாதிப்பு ஏற்பட்டால் எதிரி நாடாக இருந்தால் எச்சரிப்பார்கள் இல்லையேல் தாக்குதல் நடத்துவார்கள். உறவு நாடாக இருந்தால் உறவை முறித்துக்கொள்வதாக அறிவிப்பார்கள் என்று குறிப்பிட்ட வைகோ, ஆனால் உறவு நாடான சிறிலங்கா ராணுவம் தமிழக மீனவர்கள் மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை மத்திய அரசு கண்டு கொள்ளவும் இல்லை, எச்சரிக்கையும் செய்யவில்லை என்றார்.
கச்சத்தீவு ஒப்பந்த வரைவில் குறிப்பிட்டுள்ளபடி அப்பகுதியில் தமிழக மீனவர்கள், வலைகளை உலர்த்தவும், மீன் பிடிக்கவும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது என்று கூறிய வைகோ, இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த சிறிலங்கா அரசு தவறி வருவதால் அந்நாட்டு உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய கடற்படை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறிலங்க கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்பட்ட தகவல் உடனே இந்தியக் கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டால் அவர்களை மீட்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளனர் என்று சுட்டிக்காட்டிய வைகோ, மீனவர்கள் மீது துப்பாக்கி சுடு நடப்பதை தடுப்பதை விட்டுவிட்டு, மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வருவது வெட்கக்கேடான செயல் என்றார் |